மெச்சத்தக்க பணி செய்யும் போலீசாருக்கு‘மாதத்தின் நட்சத்திர காவலர் விருது’: சென்னை போலீஸ் கமிஷனர் அறிவிப்பு

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளார். அதில், சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் பணியாளர்களுக்கு அவர்களது நற்பணியை பாராட்டும் விதமாக தினசரி வழங்கப்படும் பாராட்டு சான்றிதழ்களுடன் உரிய வெகுமதியும் வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது. கூடுதலாக ஒவ்வொரு மாதமும் கூடுதல் காவல் ஆணையாளர் தலைமையிடம், தலைமையிலான குழு சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பான மற்றும் மெச்சத்தக்க பணி செய்யும் காவல் பணியாளர்களை கண்டறிந்து அவர்களது பணியினை மதிப்பிட்டு மாதத்தின் நட்சத்திர காவலர் என்ற விருதை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

‘மாதத்தின் நட்சத்திர காவலர்’ என்ற விருதை பெற தேர்ந்தெடுக்கப்படும் காவல் பணியாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5ம் தேதி ரூ5 ஆயிரம் பண வெகுமதியுடன் தனிப்பட்ட செயல்திறன் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படும். எனவே, காவல் ஆளினர்கள் மெச்சத் தகுந்த பணிபுரிந்து அதன் விவரத்தை தங்கள் துணை ஆணையாளர் மூலமாக கூடுதல் காவல் ஆணையருக்கு தெரிவித்து மாதத்தின் நட்சத்திர காவலர் விருதினை பெறும் வகையில் தங்கள் பணியினை சிறப்பாக செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தகவல் அனைத்து காவல் ஆளினர்களுக்கும் வாட்ஸ் அப் மூலம் சென்றடைவதை மாவட்ட, சிறப்புப் பிரிவு ஒருங்கிணைப்பு ஆய்வாளர்கள், மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய, சிறப்புப் பிரிவு காவல் நிலைய அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

Related Stories: