×

ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் போலி நகைகள் அடகு வைத்து ரூ.2.51 கோடி மோசடி: அதிமுகவை சேர்ந்த தலைவர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்; மேலாண்மை இயக்குநர் மாற்றம்; நகை மதிப்பீட்டாளர் டிஸ்மிஸ்

ஆரணி: ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் போலி நகைகள் அடகு வைத்து ரூ.2.51 கோடி மோசடி செய்த அதிமுகவை சேர்ந்த தலைவர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், மேலாண்மை இயக்குநர் மாற்றப்பட்டார். நகை மதிப்பீட்டாளர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி  அண்ணாசிலை அருகில் நகர கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வங்கி கணக்குகள் வைத்துள்ளனர். மேலும், வங்கியில் அதிமுகவை சேர்ந்த நகர செயலாளர் அசோக்குமார் தலைவராகவும், ஆனந்தன் துணைத்தலைவராகவும் உள்ளனர்.

இதில், வங்கியின் மேலாண்மை இயக்குநராக கல்யாண்குமார், வங்கி மேலாளராக லிங்கப்பன், காசாளராக ஜெகதீசன்,  உதவியாளர் சரவணன் மற்றும் நகை மதிப்பீட்டாளர் மோகன் உட்பட 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். மேலும், வங்கியில் ஆரணி டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வங்கியில் கணக்கு வைத்து, பணம் பரிவர்த்தனை, நகை கடன், வீடு மற்றும் மனைகள் அடமானம் வைத்து கடன் பெறுதல், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்குதல், சிறு வணிக கடன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த வங்கி ஊழியர்கள் மற்றும் நகை மதிப்பீட்டாளர், தங்கள் உறவினர்கள் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக கடந்த அதிமுக ஆட்சியின்போதே குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆனால், அப்போது, இதுதொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தனர். திமுக ஆட்சி பொறுப்பேற்றதையடுத்து கூட்டுறவு வங்கிகளில் 100 சதவீதம் ஆய்வு மேற்கொள்ளும்பணி நடந்து வருகிறது. அதேபோல், ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் கடந்த 21ம் தேதியில் இருந்து சில தினங்களாக அடகு நகைகளின் உண்மை தன்மை குறித்து, வேலூர் மண்டல கூட்டுறவு சார்பதிவாளர் சாணக்கியன், வேலூர் சரக மேற்பார்வையாளர் ஜெயபிரகாஷ், நகை மதிப்பீட்டாளர் பழனி மற்றும் பென்னாத்தூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள்  தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த ஆய்வு, நேற்று முன்தினம் இரவு முடிந்தது.

அப்போது ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் ரூ.29.12 கோடியில் பொதுநகை கடன்கள் வழங்கப்பட்டிருந்ததும், அதில் 77 பேரின் கணக்குகளில் போலி மற்றும் தரம் குறைவான நகைகளை அடகு வைத்து ரூ.2.39 கோடி மோசடியாக கடன் பெற்றிருந்ததும் தெரியவந்தது. மேலும் 5 பேர் மொத்தம் ரூ.21 லட்சம் மதிப்பிலான நகைகளை அடமானம் வைத்து கூடுதலாக ரூ.12 லட்சம் நகை கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். அதன்படி மொத்தம் ரூ.2.51 கோடிக்கு மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, திருவண்ணாமலை கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ராஜ்குமாருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் கல்யாண்குமார் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். வங்கி மேலாளர் லிங்கப்பன், காசாளர் ஜெகதீசன், உதவியாளர் சரவணன் ஆகிய 3 பேரை சஸ்பெண்ட் செய்தும், தற்காலிக பணியாளராக இருந்து வந்த நகை மதிப்பீட்டாளர் மோகனை பணி நீக்கம் செய்தும் இணைப்பதிவாளர் ராஜ்குமார் உத்தரவிட்டார். மேலும் இவர்கள் 4 பேர் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு பரிந்துரைத்தார். அதோடு கூட்டுறவு சங்க தலைவரையும் சஸ்பெண்ட் செய்துள்ளார்.

இதுபற்றி கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ராஜ்குமார், நேற்று ஆரணி நகர கூட்டுறவு வங்கி தலைவர் அசோக்குமாருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தொடர்ந்து பதவியில் நீடித்தால், விசாரணைக்கு இடையூறாகவும் சாட்சிகளை கலைக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 76ஏ ன்கீழ் 6 மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நகை கடன் மோசடியில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதனால் அதிமுகவை சேர்ந்த கூட்டுறவு சங்க தலைவருக்கு தொடர்புடைய பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இச்சம்பவம் ஆரணி கூட்டுறவு சங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Arani Nagar , Arani Nagar Co-operative Bank scam: Rs 2.51 crore fraud: 4 suspended Change of managing director; Jewelry appraiser dismisses
× RELATED போலி நகைகள் வைத்து ரூ.2.51 கோடி மோசடி:...