×

அறங்காவலர் குழுவில் குற்ற பின்னணி உள்ளவர்கள் திருப்பதி செயல் அலுவலர் உட்பட18 உறுப்பினர்களுக்கு நோட்டீஸ்: உயர் நீதிமன்றம் உத்தரவு

திருமலை: திருப்பதி கோயில் அறங்காவலர் குழுவில் குற்ற பின்னணி உள்ளவர்களை நியமித்த வழக்கில் செயல் அலுவலர் உட்பட 18 உறுப்பினர்களுக்கு மாநில உயர் நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கி உத்தரவிட்டுள்ளது. உலக பிரசித்தி பெற்ற ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலர் குழுவில் குற்ற பின்னணி உள்ளவர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக பாஜ மாநில செய்தி தொடர்பாளர் பானுபிரகாஷ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. புகார்தாரர் தரப்பில் வழக்கறிஞர் அஸ்வினிகுமார் ஆஜரானார். அப்போது, முன்னாள் மருத்துவ கவுன்சில் தலைவர் கேதன்தேசாய் நியமனத்திற்கு அஸ்வினிகுமார் எதிர்ப்பு தெரிவித்தார்.

கடந்த 2010ம் ஆண்டு எம்சிஐ தலைவராக இருந்தபோது, ​​பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் சேர்க்கை பெற ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாக சிபிஐயால் கைது செய்யப்பட்டார். மேலும், அவர் மீது பல்வேறு முறைகேடு வழக்குகள் உள்ளன. இதேபோல், அறங்காவலர் குழுவில் நியமிக்கப்பட்ட பல உறுப்பினர்களுக்கு குற்ற பின்னணி இருப்பதாக தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர், இந்து அறநிலையத்துறை முதன்மை செயலாளர் என மொத்தம் 18 உறுப்பினர்களுக்கு உயர் நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 3 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Board of Trustees , Notice to 18 members of the Board of Trustees with criminal background including Tirupati Executive Officer: High Court Order
× RELATED திருப்பதி தேவஸ்தானம் பங்களிப்பில் இலங்கையில் ஏழுமலையான் கோயில்