×

கட்டிட தொழிலாளி போல் 6 மாதமாக பதுங்கி இருந்த ஜார்கண்ட் மாநில மாவோயிஸ்ட் தீவிரவாதி எர்ணாவூரில் சுற்றி வளைத்து கைது: அடைக்கலம் கொடுத்த நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை

சென்னை: சென்னை எர்ணாவூரில் கட்டிட தொழிலாளி போல் பதுங்கி இருந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் தீவிரவாதி ஒருவனை மாநகர போலீசார் உதவியுடன் ஜார்கண்ட் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். .
 சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு அருகே தனியார் நிறுவனம் ஒன்று அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வருகிறது. கட்டுமான பணியில், வடமாநில சேர்ந்த  குறிப்பாக ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் பலர் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாத குழுவை சேர்ந்த முக்கிய நிர்வாகியான துக்கத்ஜி கஞ்சு(30) என்பவர் கட்டிட தொழிலாளி போல் பதுங்கி இருப்பதாக ஜார்கண்ட் தீவிரவாத ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தீவிரவாதியான துக்கத்ஜி கஞ்சு மீது கொலை, கொலை முயற்சி உட்பட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. துக்கத்ஜி கஞ்சு சென்னையில் பதுங்கி இருந்து ஜார்கண்ட் மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பு முக்கிய நிர்வாகிகளுடன் அடிக்கடி செல்போனில் பேசியதாகவும் கூறப்படுகிறது.  அதன்படி ஜார்கண்ட் தீவிரவாத ஒழிப்பு போலீசார் தீவிரவாதியை பிடிக்க மாநகர காவல் துறையின் உதவியை நாடினர்.

 அதைதொடர்ந்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கட்டிட தொழிலாளி போல் பதுங்கி உள்ள மாவோயிஸ்ட் தீவிரவாதியை பிடிக்க அனைத்து உதவிகளையும் செய்ய எண்ணூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்த ஜார்கண்ட் தீவிரவாத ஒழிப்பு போலீசாருடன் எண்ணூர் போலீசார் இணைந்து நேற்று முன்தினம் இரவு ரகசியமாக கண்காணித்து கட்டிட தொழிலாளிகள் தங்கி உள்ள சுனாமி குடியிருப்பில் துப்பாக்கி முனையில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது கட்டிட தொழிலாளி போல் கடந்த 6 மாதங்களாக எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் தங்கி கட்டிட வேலை செய்து வந்த மாவோயிஸ்ட் தீவிரவாதி துக்கத்ஜி கஞ்சுவை எண்ணூர் போலீசார் உதவியுடன் ஜார்கண்ட் மாநில தீவிரவாத ஒழிப்பு போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். இவன் ஜார்கண்ட் மாநிலத்தில் தனது மாவோயிஸ்ட் தீவிரவாத குழுக்களுடன் சேர்ந்து முக்கிய நிர்வாகியை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி துக்கத்ஜி கஞ்சு நீதிமன்ற பிணையில் வெளியே வந்து தலைமறைவாகியுள்ளார். பிறகு சென்னையில் கட்டிட வேலை செய்யும் ஜார்கண்ட் மாநில கட்டிட தொழிலாளிகளுடன் இணைந்து கடந்த 6 மாதங்களாக தங்கி கட்டிட கூலி வேலை செய்து வந்தது தெரியவந்தது.

  கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதி துக்கத்ஜியை ஜார்க்கண்ட் தீவிரவாத ஒழிப்பு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று ரயில் மூலம் ஜார்கண்ட் மாநிலத்திற்கு அழைத்து சென்றனர். இந்த வழக்கில் மாவோயிஸ்ட் தீவிரவாதி என்று தெரிந்தும் கடந்த 6 மாதங்களான அடைக்கலம் கொடுத்து கட்டிட வேலை செய்ய உதவிய ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளிகளிடம் எண்ணூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 6 மாதங்களாக தீவிரவாதி துக்கத்ஜி கஞ்சுவிடம் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் யார் யார்? வெளிநாட்கள் யாரேனும் துக்கத்ஜி கஞ்சுவை சந்தித்து பேசினரா, சதி திட்டங்கள் ஏதேனும் செய்துள்ளாரா என்பது குறித்து கிடுக்குபிடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜார்கண்ட் மாவோயிஸ்ட் தீவிரவாதி ஒருவன் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Jharkhand ,Maoist ,Ernakulam , Jharkhand Maoist militant ambushed in Ernakulam for 6 months
× RELATED ஜார்க்கண்டில் 12 மாவோயிஸ்ட்கள் சரண்