அதிமுக ஒன்றியக்குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: ஆர்டிஓ தலைமையில் சிறப்பு கூட்டம்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அதிமுக ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நடத்த  திருத்தணி ஆர்டிஓ தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியக்குழுத் தலைவராக அதிமுகவை சேர்ந்த ஜான்சிராணி விஸ்வநாதன் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக பதவி வகித்து  வருகிறார். ஒன்றியத்தில் உள்ள 12 ஒன்றிய கவுன்சிலர்களில் சமீபத்தில் அதிமுகவை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் இறந்தார். இதனால், மொத்தமுள்ள 11 கவுன்சிலர்களின் திமுகவை சேர்ந்த 4 பேர், அதிமுகவை சேர்ந்த 3 பேர், தேமுதிக, காங்கிரசில் தலா ஒருவர் என 9 பேர் ஒன்றிய குழு தலைவர் மீது அதிருப்தியடைந்து  திருத்தணி ஆர்டிஓ சத்யாவை சந்தித்து, ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன் மனு  அளித்தனர்.

இந்த  மனு குறித்து ஆர்டிஓ விசாரணை நடத்தினார். தொடர்ந்து, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான சிறப்பு கூட்டத்தை நடத்த ஆர்டிஓ சத்யா உத்தரவிட்டார்.   இதையடுத்து, கடந்த 20 நாட்களுக்கு முன் கவுன்சிலர்கள் அனைவருக்கும் கூட்டம் நடைபெற உள்ளதாக  தபால்  மூலம் கடிதம்  அனுப்பபட்டது.இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஆர்டிஓ சத்யா  தலைமையில் கவுன்சிலர்கள் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.  இதில் அதிமுகவை சேர்ந்த ஒன்றிய குழுத் தலைவர் ஜான்சிராணி மீது 9 கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சம்பவம், பள்ளிப்பட்டு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: