×

முசிறி திருவாசி கோயிலில் முதலாம் ராஜராஜர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

முசிறி: திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள திருவாசி மாற்றுரை வரதீசுவரர் கோயிலில் எஸ்ஆர்சி கல்லூரி வரலாற்று துறை தலைவர் நளினி மற்றும் முசிறி அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்று துறை உதவி பேராசிரியை அகிலா ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில், 297 வரிகளில் பொறிக்கப்பட்டுள்ள முதலாம் ராஜராஜர் கால (பொதுக்காலம் 996) கல்வெட்டு ஒன்றை கண்டறிந்தனர். இதை, டாக்டர் ராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் கலைக்கோவன் ஆராய்ந்தார். மாவட்டத்தில் இதுவரை கிடைத்திருக்கும் கல்வெட்டுகளில் இது தனித்தன்மை வாய்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கலைக்கோவன் கூறியது: முதலாம் ராஜராஜரின் அரண்மனை பெரிய வேளத்து பணிப்பெண்ணாக இருந்த நக்கன் கற்பகவல்லி, தம்மை திருவாசி கோயில் இறைவனின் மகளாக எண்ணி வாழ்ந்தவர். தம் ஊதிய சேகரிப்பிலிருந்து 201 கழஞ்சு பொன்னை இக்கோயிலுக்கு வழங்கிய கற்பகவல்லி, ஆண்டுக்கு 16 கலம் நெல் விளையக்கூடிய இரு நிலத்துண்டுகளையும் சேர்த்தளித்துள்ளார்.

திருவாசி கோயிலில் ராஜராஜர் காலத்தே தலைக்கோலிகளும், தேவரடியார்களும், கந்தர்வர்களும், இசைக்கருவி கலைஞர்களும், சோதிடர், தச்சர், வேட்கோவர் உள்ளிட்ட தொழில் வல்லுநர்களும் கோயில் வழிபாடு உள்ளிட்ட பணிகளுக்கு பொறுப்பேற்ற சிவாச்சாரியார்கள், பரிசாரகர்கள் முதலிய பலரும் இருந்தமை அறியப்படுகிறது. இந்த கல்வெட்டில் அப்பம் எப்படி செய்யப்பட்டது என்ற குறிப்பு கிடைப்பதுடன், விழாக்கால பணியாளர்களின் பட்டியலும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஊதிய விகிதங்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இதுபோலவே அமலீசுவரத்தில் இருந்த பணியாளர்கள் ஐவர் பெயரும் கிடைத்துள்ளன என்றார்.

Tags : Rajaraja ,Temple of Mussiki Thiruvasi , Musiri, Thiruvasi Temple, Inscription, Discovery
× RELATED தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை...