×

விசாரணை முடியும் முன்பே ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடக்கிறது என எப்படி கூறமுடியும்: அப்பல்லோ நிர்வாகத்திடம் உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: விசாரணை முடியும் முன்பே முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடக்கிறது என்று எப்படி கூறமுடியும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தின் ஒட்டுமொத்த அணுகுமுறையும் தவறாக உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணையில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

அதாவது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார். இந்த மரணத்தில் மர்மம் உள்ளது என முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக தற்போது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது. உச்சநீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணையில், அப்பல்லோ மருத்துவமனை தான் விசாரணைக்கு தடையாக உள்ளது என்று ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் குற்றம் சாட்டினார்.

அதற்க்கு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்து, ஆறுமுகசாமி ஆணையத்தின் ஒட்டுமொத்த அணுகுமுறையும் தவறாக உள்ளது. மேலும் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணையத்தில் மருத்துவ வல்லுனர்கள் யாரும் இடம்பெறவில்லை. அதனால் மருத்துவ ரீதியிலான விவரங்களை எந்த அடிப்படையில் நாங்கள் தெரிவிக்க முடியும். அப்பல்லோ அளித்த சிகிச்சைக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் கூட திருப்தி தெரிவித்தனர்.

மேலும் நிறைய அரசியல் தலைவர்கள் விசாரிக்கப்படாமல் இருக்கும் போது மருத்துவர்களை மட்டும் விசாரிப்பது ஒருதலைபட்சமானது. இது எங்கள் நற்பெயர் சார்ந்த வி‌ஷயம் என்பதால் அதனை ஆரம்பத்திலேயே எதிர்க்க உரிமை உண்டு. அதனையடுத்து, இனி நாங்கள் ஆணையத்தின் முன்பு ஆஜராக மாட்டோம் என உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

இந்தநிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதாவது,  விசாரணை முடியும் முன்பே ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடக்கிறது என்று எப்படி கூறமுடியும் என கேட்டது. மேலும்  ஒருதலைப்பட்டசமாக நடந்ததா என்பதை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த பிறகே அறிய முடியும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Tags : Arumugasami Commission ,Supreme Court ,Apollo , How can the Arumugasami Commission be said to be acting unilaterally before the end of the trial: Supreme Court questions Apollo management
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...