காரியாபட்டியில் விடிய, விடிய கனமழை 55 வீடுகளில் புகுந்தது வெள்ளநீர்-300க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பு

காரியாபட்டி : காரியாபட்டி பகுதியில் விடிய, விடிய பெய்த கனமழையால் நரிக்குறவர் காலனியில் 55 வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. இதனால் 300க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.காரியாபட்டி அருகே அரியநேந்தல் கிராமத்தில் உள்ளது நரிக்குறவர் காலனி. இங்கு 300க்கும் மேற்பட்டோர் வசித்த வருகின்றனர். கடந்த ஆட்சி காலத்தில் இங்கு நரிக்குறவர்கள் குடியிருக்க நீர்நிலைகள் உள்ள இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

 அதில் இவர்கள் சிறு குடிசைகள் கட்டி வாழ்ந்து வந்தனர். இப்பகுதியில் நேற்று மாலை பெய்ய துவங்கிய கனமழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. இந்த கனமழையால் 55 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பொருட்கள் அனைத்தும் நீரில் அடித்து செல்லப்பட்டது. இதையடுத்து இப்பகுதியில் இருந்த 300க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மந்திரி ஓடை பஸ்நிலைய நிழற்குடையில் தஞ்சமடைந்தனர். தகவலறிந்ததும் தாசில்தார் தனக்குமார் தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் எஸ்ஐ அசோக்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கலெக்டர் மேகநாதன்ரெட்டி உத்தரவின்பேரில், நிழற்குடையில் தங்கியிருந்த அனைவரும் அருகில் உள்ள அரசு பள்ளிக்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்கப்பட்டது.

இதுகுறித்து நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘மழை குறைந்தாலும் மழைநீர் வடியாமல் குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கிறது. மழைக்காலம் வந்தாலே எங்கள் நிலைமை திண்டாட்டமாகி விடுகிறது. இதுகுறித்து கடந்த அதிமுக ஆட்சியில் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தமிழக அரசு எங்களுக்கு நிரந்தரமாக வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

மேலும் காரியாபட்டி அருகே பாம்பாட்டி ஊராட்சி பணிக்கனேந்தல் கிராமத்தில் கனமழையின் காரணமாக வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் இரவு முழுவதும் மக்கள் மேடான பகுதியில் இருந்து வந்துள்ளனர். தகவலறிந்ததும் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மந்திரி ஓடை கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன் ஆகியோர் மழைநீர் சூழ்ந்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து அதிகாரிகளுடன் இணைந்து நரிக்குறவர் காலனி, பணிக்கநேந்தல் கிராமம், வாழவந்தாள்புரம் ஆகிய பகுதிகளில் மழைநீர் செல்லும் வரத்து கால்வாய் அடைப்பை ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரும் பணியை மேற்கொண்டனர். வீடுகளிலிருந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு உணவுகள் ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது.

Related Stories:

More