விதவிதமாக தரமான முறையில் தயாரிப்பு தீபாவளிக்கு ரெடியாகும் அரியக்குடி விளக்குகள்-கொரோனா அடங்கியதால் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு

காரைக்குடி : காரைக்குடி பகுதியில் பல்வேறு பாரம்பரிய சிறப்புகள் உள்ளன. இதில் அரியக்குடி பகுதியில் பித்தளை விளக்குகள் தயாரிப்பும் முக்கிய இடம் பிடிக்கிறது. இப்பகுதியில் 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே பித்தளை விளக்குகள் தயாரித்து வந்துள்ளனர். தமிழகத்தில் கும்பகோணம், வாகைகுளம், மதுரை, காரைக்குடி பகுதி பித்தளை பொருட்களுக்கு பெயர்போனது. இங்கு உற்பத்திசெய்யப்படும் பொருட்கள் எடை அதிகமாக கெட்டியாக இருப்பதால் தனி சிறப்போடு, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விற்பனையாகி வருகிறது. அனைத்து ஆன்மீக தலங்களிலும் அரியக்குடி விளக்குகளுக்கு தனிமவுசு உண்டு.

மோல்ட் பெட்டியில் டை எடுத்து அதில் ஆற்றுவண்டல் மண்ணை நிரப்பி 1100 டிகிரியில் பித்தளையை உருக்கி ஊற்றுகின்றனர். பின்னர் தேவையற்ற பகுதிகளை வெட்டி எடுத்து பாலீஸ் போடப்படுகிறது. 5 இஞ்ச் முதல் 6 அடி வரை விளக்குகள் தயாரிக்கப்படுகிறது. ஐந்து முகவிளக்கு, பிரதோச விளக்கு, அன்னம் விளக்கு, குலவிளக்கு, லட்சுமிவிளக்கு, பாவை விளக்கு, யானை விளக்கு உள்பட பல்வேறு வகையான விளக்குகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

கொரோனா பாதிப்பால் கடந்த 2 ஆண்டுகளாக விற்பனை பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது ஓரளவு ஆர்டர்கள் வர துவங்கி உள்ளதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

உற்பத்தியாளர் அரியக்குடி அசோக் கூறுகையில், 4 தலைமுறைக்கு மேல் இந்த தொழிலில் ஈடுபட்டுவருகிறோம். 100க்கும் மேற்பட்டவர்கள் இங்கு இத்தொழிலில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பால் 10 வருடங்கள் பின்னோக்கி சென்றுள்ளோம். கடந்த மாதம் கிலோ ரூ.380க்கு விற்பனை செய்யப்பட்ட பித்தளை தற்போது கிலோ ரூ.484க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் பித்தளை உருக்க தேவையான சைனாகோல் கரி முன்பு கிலோ ரூ.29க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ. 47 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல மூலப்பொருட்கள் விலை கடுமையாக உயர்வு, ஆள்பற்றாக்குறை உள்பட பல்வேறு காரணங்களால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. பித்தளையை பொறுத்தவரை தங்கம் போல் ஒவ்வொரு நாளும் ஒரு விலைக்கு விற்பனையாகிறது. இதனால் பொருட்கள் விலையையும் உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். தீபாவளி பண்டிகைக்கு தீபம் ஏற்றி கொண்டாடுவது வழக்கம்.

இதற்காக தற்போது பல்வேறு பகுதியில் இருந்து ஆர்டர்கள் வர துவங்கி உள்ளன. தவிர தமிழக அரசு கோவில்களை திறக்கவும், கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி சுற்றுலாதலங்களுக்கும் அனுமதி அளித்துள்ளதன் மூலம் விற்பனை அதிகரித்து வருகிறது. எடை அதிகமாக கெட்டி பொருள் என்பதால் மக்களிடம் எங்கள் அரியக்குடி விளக்குகளுக்கு எப்போது தனி இடம் உண்டு என்றார்.

Related Stories:

More
>