தமிழக இளைஞர் காங். பதவிகளுக்கு வேட்புமனு உள்ளாட்சி தேர்தல்களில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம்: தேசிய பொதுச் செயலாளர் பேட்டி

சென்னை:  தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கலும், புதிய உறுப்பினர் சேர்ப்பு இயக்கமும் நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. இதில், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆபிரகாம் ராய் மணி, தேர்தல் பொறுப்பாளர் வேகி வெங்கடேஷ், தேர்தல் அலுவலர் ராஜூ பி.நாயர், காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா, வக்கீல் செல்வம், பொதுச் செயலாளர் சிரஞ்சீவி, ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆபிரகாம் ராய் மணி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக இளைஞர் காங்கிரசில் பொறுப்புக்கு வர விரும்புபவர்கள் இன்று முதல் நவம்பர் 1ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

வேட்பு மனு மீது ஆட்சேபனை கூறுபவர்கள் இன்று முதல் நவம்பர் 2ம் தேதி வரை கூறலாம். நவம்பர் 4ம்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தமிழக இளைஞர் காங்கிரசில் உறுப்பினர் சேர்க்கை நவம்பர் 8ல் தொடங்கி டிசம்பர் 7 வரை நடைபெறும். இதில் உறுப்பினராக விரும்புபவர்கள் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். தமிழக இளைஞர் காங்கிரசுக்கு மாநில அளவில் 34 பதவிகளும், மாவட்ட அளவில் 24 பதவிகளும், சட்டமன்ற அளவில் 24 பதவிகளும் மேற்கண்ட நடைமுறை மூலமாக தேர்வு செய்யப்படும். நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அதிக அளவில் இளைஞர்கள் களமிறக்கப்படுவார்கள். இளைஞர்களுக்கு முன்னுரிமை காங்கிரஸ் கட்சியில் கொடுக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More