×

மும்பை, மாலத்தீவில் பாலிவுட் பிரபலங்களை மிரட்டி ரூ.1,000 கோடி பறிப்பு: வான்கடே மீது அமைச்சர் நவாப் மாலிக் குற்றச்சாட்டு

மும்பை: மும்பை மற்றும் மாலத்தீவில் என்சிபி அதிகாரி வான்கடே பாலிவுட் பிரபலங்களிடம் ரூ.1,000 கோடி பணத்தை மிரட்டி பறித்ததாக மகாராஷ்ரா அமைச்சர் நவாப் மாலிக் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக நவாப் மாலிக் நேற்று அளித்த பேட்டி: போதை பொருள் தடுப்பு பிரிைவ (என்சிபி) சேர்ந்த ஒருவரிடம் இருந்து எனக்கு 4 பக்க கடிதம் வந்துள்ளது. அதில் மண்டல இயக்குனர் சமீர் வான்கடே மீது சில குற்றம்சாட்டு கூறப்பட்டுள்ளது. மும்பை, மாலத்தீவை சேர்ந்த பாலிவுட் பிரபலங்களை மிரட்டி, அவர  ரூ.1000 கோடி பறித்துள்ளார்.

இந்த கடிதத்தின் நகலை முதல்வர் உத்தவ் தாக்கரே, உள்துறை அமைச்சர் திலிப் வல்சே பாட்டீல், போலீஸ் டிஜிபி சஞ்சய் பாண்டே, காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு அனுப்பியுள்ளேன். தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அமைப்புக்கு எனது போராட்டம் எதிரானதல்ல. கடந்த 35 ஆண்டுகளாக அந்த அமைப்பு சிறப்பான பணியை ஆற்றி வருகிறது. மக்களை மிரட்டி பணம் பறிப்பவர்களுக்கு எதிராகவே போராடுகிறேன். ஏற்கெனவே இந்த அமைப்பு விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் 4 பக்க கடிதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களையும் அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* ஜாமீன் மனு இன்று விசாரணை
ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை கீழ் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்து விட்டதால், மும்பை உயர் நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இதன் விசாரணை நேற்று நடைபெற்றது. ஆர்யன் கான் சார்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி வாதாடுகையில், ‘‘ஆர்யன் கானிடம் இருந்து போதை பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அவர் போதை பொருளை பயன்படுத்தினாரா? இல்லையா? என்பதை உறுதி செய்ய மருத்துவ பரிசோதனையும் செய்யப்படவில்லை. 23 வயது இளைஞரான இவருக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டுமே தவிர, சிறையில் அடைக்கக் கூடாது,’’ என்றார். இன்று மதியமும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு மும்பை சிறப்ப நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.

* தொலைபேசி உரையாடல் பதிவு
அமைச்சர் நவாப் மாலிக் மேலும் கூறியதாவது: என்சிபி அதிகாரி வான்கடே சட்டவிரோதமாக இருவரது தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்துள்ளார். அவர்களில் ஒருவர் மும்பையைச் சேர்ந்தவர் மற்றொருவர் தானேவை சேர்ந்தவர். இது தொடர்பான முழு விவரம் என்னிடம் உள்ளது. அதை தக்க சமயத்தில் வெளியிடுவேன். எனது மகள் நிலோபர் மாலிக் தொலைபேசியில் பேசியது தொடர்பான விவரங்களை தருமாறு மும்பை போலீசாரிடம் என்சிபி அதிகாரி எவ்வாறு கேட்கலாம்?. என் மகள் என்ன குற்றவாளியா? வான்கடேவின் கோரிக்கையை போலீசார் நிராகரித்துள்ளனர். மேலும் வான்கடே போலி சாதி சான்றிதழை சமர்பித்து மத்திய அரசு வேலை பெற்றது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* எங்கள் குடும்பத்துக்கு கொலை மிரட்டல்
மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவின் மனைவி கிராந்தி ரெட்கர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘எனது கணவர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரம் அற்றவை. அவர் மிகவும் நேர்மையான அதிகாரி. நடிகர்களிடம் எனது கணவர் மிரட்டி பணம் பறித்ததாக அமைச்சர் நவாப் மாலிக் கூறியுள்ள குற்றச்சாட்டில் உண்மை இல்லை. சமீர் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராதவர். இந்த விவகாரத்தில் எனக்கும் எனது குடும்பத்தினர், சமீருக்கும் கொலை மிரட்டல்கள் வருகின்றன’’ என்றார்.

Tags : Minister ,Nawab Malik ,Wankhede ,Bollywood ,Mumbai ,Maldives , Nawab Malik blames Wankhede for extorting Rs 1,000 crore from Bollywood celebrities in Mumbai, Maldives
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...