8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா

துபாய்: நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டத்தில், தென் ஆப்ரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. துபாயில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்துவீசியது. சிம்மன்ஸ், லூயிஸ் இருவரும் வெஸ்ட் இண்டீஸ் இன்னிங்சை தொடங்கினர். ஒரு முனையில் லூயிஸ் அதிரடியாக விளையாட, சிம்மன்ஸ் சிங்கிள் எடுக்கவே தட்டுத் தடுமாறினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் ஸ்கோர் வேகம் ஜான் ஏற முழம் குறைந்தது.

32 பந்தில் அரை சதம் அடித்த லூயிஸ் 56 ரன் (35 பந்து, 3 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி மகராஜ் பந்துவீச்சில் ரபாடாவிடம் பிடிபட்டார். அடுத்து வந்த நிகோலஸ் பூரன் 12 ரன் எடுத்து வெளியேற, ரசிகர்களின் பொறுமையை வெகுவாக சோதித்த சிம்மன்ஸ் 35 பந்தில் 16 ரன் எடுத்து ரபாடா வேகத்தில் கிளீன் போல்டானார். அதிரடி வீரர்கள் கிறிஸ் கேல் 12, ரஸ்ஸல் 5, ஹெட்மயர் 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து அணிவகுப்பு நடத்தினர். ஓரளவு தாக்குப்பிடித்த கேப்டன் போலார்டு 26 ரன் (20 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பிரிடோரியஸ் பந்துவீச்சில் டுஸன் வசம் பிடிபட்டார்.

ஹேடன் வால்ஷ் கோல்டன் டக் அவுட்டாகி நடையை கட்ட, வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன் குவித்தது. டுவைன் பிராவோ (8), அகீல் உசேன் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் பிரிடோரியஸ் 3, மகராஜ் 2, ரபாடா, நார்ட்ஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். நார்ட்ஜ் 4 ஓவரில் 14 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 144 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா களமிறங்கியது. கேப்டன் பவுமா, ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் துரத்தலை தொடங்கினர்.

பவுமா 2 ரன் மட்டுமே எடுத்து, துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். ரீஸா - வாண்டெர் டுஸன் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 57 ரன் சேர்த்தது. ரீஸா 39 ரன் (30 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அகீல் பந்துவீச்சில் ஹெட்மயர் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த மார்க்ரம் அதிரடியாக விளையாடி வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சிதறடித்தார். அவர் 25 பந்தில் அரை சதத்தை நிறைவு செய்ய, தென் ஆப்ரிக்கா 18.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்து அபாரமாக வென்றது. டுஸன் 43 ரன் (51 பந்து, 3 பவுண்டரி), மார்க்ரம் 51 ரன்னுடன் (26 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா 2 புள்ளிகள் பெற்றது. அன்ரிச் நார்ட்ஜ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories:

More