அமரீந்தர் சிங் இன்று புதிய கட்சி துவக்கம்? பஞ்சாப்பில் பரபரப்பு

சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவுடன் ஏற்பட்ட மோதலால், இம்மாநில முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர் சிங் விலகினார். பின்னர் அவர், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லிக்கு சென்று சந்தித்து பேசியதால், அவர் பாஜ.வில் இணையவதாக பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், புதிய கட்சி தொடங்கப் போவதாகவும், விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு கண்டால் பாஜ.வுடனும், மேலும், அகாலி தளத்தில் இருந்து பிரிந்து சென்ற ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடனும் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக அமரீந்தர் கடந்த வாரம் அறிவித்தார்.  

இந்நிலையில், இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு அமரீந்தர் அழைப்பு விடுத்துள்ளார். இதில் அவர், புதிய கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சித்து, `கடந்த நான்கரை ஆண்டுகளாக பண்ணை வீட்டை விட்டு வெளியே வராத அமரீந்தர், திடீரென புதிய கட்சி தொடங்குவதாக கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது,’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: