தனிப்பட்ட விருப்பங்களை தியாகம் செய்யுங்கள் ஒழுக்கம், ஒற்றுமைதான் கட்சியை பலப்படுத்தும்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு சோனியா அறிவுரை

புதுடெல்லி: ‘ஒழுக்கம், ஒற்றுமை தான் கட்சியை பலப்படுத்தும். இதற்காக தனிப்பட்ட லட்சியங்களை தியாகம் செய்ய தயங்கக் கூடாது,’ என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தினார். பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் வர இருக்கிறது. இந்நிலையில், இம்மாநிலத்தில் தேர்தலை எதிர்கொள்ளும் விதம், பிரசார யுக்தி ஆகியன குறித்து, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி உள்பட அனைத்து மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்கள், பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது: ஒன்றிய அரசின் மோசமான அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கட்சி தனது போராட்டத்தை இரட்டிப்பாக்க வேண்டும். மாநில காங்கிரஸ் தலைவர்களிடம் தெளிவும், ஒற்றுமையும் இல்லை. ஒழுக்கம், ஒற்றுமை தான் கட்சியை பலப்படுத்தும். இதற்காக தனிப்பட்ட விருப்பங்களை தியாகம் செய்ய தயங்கக் கூடாது. பாஜ.வின் பொய் பிரசாரத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் தொண்டர்களை தயார்படுத்த பயிற்சி அளிக்க வேண்டும். பாஜ., ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொய் பிரசாரத்தை சிந்தாந்த ரீதியாக எதிர்த்து போராட வேண்டும்.

இந்தப் போரில் நாம் வெற்றி பெற வேண்டுமானால் நம்பிக்கை அவசியம். பாஜ.வின் பொய் பிரசாரங்களை மக்கள் முன் அம்பலப்படுத்த வேண்டும். நாடு எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து தினமும் அகில இந்திய காங்கிரஸ் அறிக்கை வெளியிடுகிறது. ஆனால், இந்த செய்தி, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அடிமட்ட தொண்டர்கள் வரை சென்றடைவதில்லை. மோடி அரசு நமது அமைப்பை காங்கிரஸ் அமைப்பை அழிக்க நினைக்கிறது. அப்படி செய்துவிட்டால் மக்களுக்கு பதில் சொல்லும் பொறுப்பில் இருந்து தப்பித்து கொள்ளலாம் என்று நினைக்கிறது. இந்த அரசு ஜனநாயக அடிப்படைகளையே கேள்விக்குறியாக்கி உள்ளது. விவசாயிகள், இளைஞர்கள், வணிகர்கள் போராடும் போது காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்க வேண்டும். குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.  

* நவம்பர் 1ம் தேதி முதல் உறுப்பினர்கள் சேர்க்கை

சோனியா பேசியபோது, ‘5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு  தொடக்கத்தில் தேர்தல் வர இருப்பதால், நவம்பர் 1 முதல் மார்ச் 31ம் தேதி வரை கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கை முகாமை நடத்த வேண்டும். அமைப்பு  பலப்படும் போது தான் கூட்டு வெற்றியும், தனிப்பட்ட வெற்றியும் கிடைக்கும்,’ என்றும் கூறினார்.

Related Stories:

More
>