காரியாபட்டியில் விடிய விடிய கனமழை: 55க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது

காரியாபட்டி: காரியாபட்டியில் விடிய விடிய பெய்த கனமழைக்கு, நரிக்குறவர் காலனியில் 55க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் நேற்றிரவு விடிய, விடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. விடிய விடிய பெய்த இந்த மழையால், காரியாபட்டி அருகே அரியநேந்தல் கிராமத்தில் உள்ள நரிக்குறவர் காலனியில் மழைநீர் சூழ்ந்தது.

இதில் 55க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது.  இதன் காரணமாக வீடுகளில் இருந்த பொருட்கள் அடித்து செல்லப்பட்டன. மின் சாதனங்கள் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் பழுதடைந்தன. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் வீடுகளிலிருந்து வெளியேறி, அருகிலுள்ள மந்திரி ஓடை பேருந்து நிலைய நிழற்குடையில் தஞ்சமடைந்தனர். தகவலறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கலெக்டர் மேகநாதன்ரெட்டி உத்தரவின்பேரில், பேருந்து நிறுத்த நிழற்குடையில் தங்கியிருந்த அனைவரும் அருகில் உள்ள அரசு பள்ளிக்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டனர். தாசில்தார் தனக்குமார் தலைமையில் வருவாய்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More