குமரியில் குழந்தைகள், முதியோர் காப்பக பெயரை கூறி வீடு, வீடாக பணம் வசூலித்து மோசடியில் ஈடுபடும் கும்பல்: கன்னியாஸ்திரி வேடத்தில் சுற்றிய பெண்ணிடம் நடந்த விசாரணையில் திடுக் தகவல்

கருங்கல்: குமரியில் குழந்தைகள், முதியோர் காப்பகம் பெயரை கூறி வீடு, வீடாக பணம் வசூலித்து  மோசடி செய்வதாக வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள ஆலஞ்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில், கன்னியாஸ்திரி உடையுடன் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அனாதை இல்லம் மற்றும் முதியோர் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு உதவுமாறு கூறி பணம் வசூலித்தார். கன்னியாஸ்திரி என்பதால் ஏராளமானவர்கள், ரூ.500, ரூ.1000 என பணத்தை வழங்கினர்.

ஒரு சிலர் ரூ.2 ஆயிரம் வழங்கினர். இது குறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதி ஆலய நிர்வாகிகள் பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது மதுரையில் உள்ள ஒரு காப்பகத்தின் பெயரை கூறி, அங்கிருந்து வருவதாக கூறினார்.  எந்த சபையை சேர்ந்தவர் என கேட்ட போது முன்னுக்குப்பின் முரணாக பேசினார். மதுரையை சேர்ந்த தொண்டு நிறுவன ரசீதை காண்பித்தார். அந்த ரசீதில், அறக்கட்டளை முகவரி ஒன்று இருந்தது. அந்த முகவரியில் விசாரித்த போது, அங்கிருந்தவர்களும் இது தொடர்பாக தெளிவாக எதுவும் கூற வில்லை.

இதையடுத்து அந்த பெண்ணை, கருங்கல் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அந்த பெண், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியாக சென்று இது போன்று பணம் வசூலித்து வருவதும் தெரிய வந்தது. அவருடன் வந்த பலர், நாகர்கோவில் அடுத்த திருப்பதிசாரம் அருகே வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருப்பதாகவும், தான் மட்டும் இந்த வசூலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார். இதையடுத்து அந்த பெண்ணுடன் தங்கி இருந்தவர்களை விசாரணைக்காக வரவழைத்தனர்.

அவர்களிடம்  நடந்த விசாரணையில், மதுரையில் உருவாக்கப்பட்டு உள்ள ஓர் அமைப்பில், ரூ. 3 ஆயிரம் செலுத்தி உறுப்பினராக சேர்ந்தால், அவர்கள் அந்த அமைப்பின் முகவரி மற்றும் பதிவு எண், தொலைபேசி எண் உள்ளிட்டவை அச்சிட்ட ரசீது புத்தகம் வழங்குவார்கள். அதன் மூலம் எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் வசூலித்து கொள்ளலாம். ஆனால் வாரம் ரூ.1500, அந்த அமைப்புக்கு செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த வில்லை என்றால், தங்களது ரசீது புத்தகத்தை திருடி சென்றதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்து விடுவார்கள் என்பதும் தெரிய வந்தது.

ஆனால் அந்த அமைப்பு முறைப்படி பதிவு செய்யப்பட்டு,  இருப்பதாகவும், தெரிவித்தனர். இதையடுத்து அந்த பெண்ணிடம் இனி இது போன்று பணம் வசூலிக்க கூடாது. அவ்வாறு பணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இப்போதைக்கு அந்த பெண்ணை விட்டு விடுமாறு ஆலய நிர்வாகிகள் தரப்பில் கூறினர். இதையடுத்து அந்த பெண்ணின் கணவரை வரவழைத்து, எச்சரித்து எழுதி வாங்கிக் ெகாண்டு போலீசார் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே அதே பகுதியில் இரு வாலிபர்கள் நாகர்கோவிலில் உள்ள அனாதை இல்லத்திற்கு எனக்கூறி பணம் வசூலித்தனர். அவர்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

சேலையை மாற்றினர்

கன்னியாஸ்திரி உடையுடன் பிடிபட்ட பெண் மிகவும் டிப் டாப்பாக இருந்தார். எளிதில் அவரை அடையாளம் காண முடியாத வகையில் அவரின் நடவடிக்கைகள் இருந்தன. அவ்வப்போது ஆங்கிலத்திலும் பேசினார். ஆனால் தொடர் விசாரணையில் தான் அவரின் குட்டு அம்பலமானது. இதற்கிடையே அந்த பெண் கன்னியாஸ்திரி உடையுடன், வெளியே வந்தால் விட மாட்ேடாம் என கூறி ஏராளமான பெண்கள் கையில் துடைப்பத்துடன் நின்று கொண்டு இருந்தனர். இதனால் பிரச்சினை எதுவும் வந்து விட கூடாது என்பதால், ஆலய பொறுப்பாளர்கள் பேசி, அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து மாற்று சேலை வரவழைத்து, அதை அணிந்து கொண்டு செல்லுமாறு கூறி அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர்.

Related Stories:

More