போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை நாளைக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்

மும்பை: போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை நாளைக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம். மும்பை கப்பலில் நடந்த போதை பார்ட்டியில் சிக்கிய பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது விவகாரம், தற்போது வேறு திசையை நோக்கி பயணிக்கிறது. போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் மும்பை மண்டல இயக்குநர் சமீர் வான்கடே, தற்போது லஞ்ச குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். கைது செய்யப்பட்ட ஆர்யன் கானை விடுவிக்க மும்பை போதை ெபாருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் ரூ.25 கோடி வரை பேரம் பேசியதாக எழுந்த புகாரை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில், தன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை சமீர் வான்கடே மறுத்துள்ளார். ஆனால், ஆளும் மாநில அரசின் அமைச்சர் நவாப் மாலிக், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் உள்ளிட்ட தலைவர்கள் சமீர் வான்கடே மீது தொடர்ந்து புகார்களை தெரிவித்து வருகின்றனர். சமீர் வான்கடே மீது லஞ்ச குற்றச்சாட்டு வைக்கப்பட்டதால் மும்பை காவல்துறை தனியாக விசாரணையை தொடங்கியுள்ளது. ஆனால், இதுதொடர்பாக எவ்வித சம்மனும் எவருக்கும் அனுப்பவில்லை. போதைப் ெபாருள் கட்டுப்பாட்டு பிரிவின் விஜிலென்ஸ் குழுவினர், இவ்விவகாரம் குறித்து ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே கிழமை நீதிமன்றம் மனுவை நிராகரித்த நிலையில் மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆர்யன் கான் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் வழக்கில் ஆர்யன்கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது ஆர்யன் கான் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி; ஆர்யன் கான் போதைப்பொருள் உட்கொண்டதற்கான மருத்துவ பரிசோதனை ஆதாரங்கள் இல்லை. ஆர்யன் கானிடம் இருந்து போதைப்பொருள் எதுவும் கைப்பற்றவில்லை என வாதம் செய்தார். தொடர்ந்து இரு தரப்பி விசாரணைக்கு பிறகு ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது.

Related Stories:

More