வியன்னா ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் பெரட்டினி, முர்ரே வெற்றி

வியன்னா: ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் தற்போது முன்னணி டென்னிஸ் நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ள வியன்னா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த முதல் சுற்றுப் போட்டி ஒன்றில் இத்தாலியின் மேட்டியோ பெரட்டினியும், ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாப்யிரினும் மோதினர். ஏடிபி தரவரிசையில் பெரட்டினி தற்போது 7ம் இடத்திலும், பாப்யிரின் 71ம் இடத்திலும் உள்ளனர். இப்போட்டியில் முதல் செட்டில் சற்றுப் போராடிய பாப்யிரின், அந்த செட்டை டைபிரேக்கரில் பறி கொடுத்

தார். இரண்டாம் செட்டை எளிதாக கைப்பற்றிய பெரட்டினி, இப்போட்டியில் 7-6, 6-3 என்ற கணக்கில் எளிதாக வென்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் போலந்தின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரம் ஹியூபர்ட் ஹர்காசுடன், இங்கிலாந்தின் அனுபவம் மிக்க வீரர் ஆண்டி முர்ரே மோதினார். ஏடிபி தரவரிசையில் ஹர்காஸ் தற்போது 10ம் இடத்தில் உள்ளார். தரவரிசையில் முன்னாள் நம்பர் 1 வீரர் என்ற போதிலும், 2 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சர்வதேச டென்னிஸ் போட்டிகளுக்கு திரும்பியுள்ள ஆண்டி முர்ரே தற்போது 156ம் இடத்தில் உள்ளார். இதே வியன்னா ஓபன் டென்னிசில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை ஆண்டி முர்ரே, இரண்டு முறை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் எதிர்பாராத வகையில் ஆண்டி முர்ரே 6-4, 6-7, 6-3 என 3 செட்களில் ஹர்காசை வீழ்த்தினார். போட்டி முடிந்த பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு திரும்பிய பின்னர், சில போட்டிகளில் நான் சரியாக ஆடவில்லை. ஆனால் இந்தப் போட்டியில் எனது ஆட்டம் எனக்கு திருப்தியளித்துள்ளது என்றே கூற வேண்டும். ஹர்காசும் சிறப்பாக ஆடினார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.

Related Stories: