லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவத்தில் 23 பேர் தான் நேரில் பார்த்த சாட்சிகளா? ; நீதிபதிக்கு கேள்வி

டெல்லி: லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவத்தில் வெறும் 23 பேர் தான் நேரில் பார்த்த சாட்சிகளாக உள்ளார்களா என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தரப் பிரதேச அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்ட வழக்கில் 16 எதிரிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்/

சம்பவம் தொடர்பாக 67 சாட்சிகளில் 30 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக கூறியுள்ள அவர், 23 பேர் விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்டதை நேரில் பார்த்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ரமணா, நூற்றுக்கனக்கான விவசாயிகள் போராட்டக் களத்தில் இருந்த போதும் 23 பேர் மட்டும் தான் சம்பவத்தை நேரில் பார்த்தார்களா என கேள்வி எழுப்பியுள்ளார். கூடுதல் சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யாதது ஏன் என உத்தரப் பிரதேச அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். உடனடியாக கூடுதல் சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர்.சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகளை விரைந்து ஆய்வு செய்து வழக்கில் சாட்சியங்களாக சேர்க்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் லக்கிம்பூரில் அக் 3ம் தேதி நடைபெற்ற கலவரத்தில் பத்திரிகையாளர், பாஜகவினர் உட்பட 4 பேர் உயிரிழந்தது தொடர்பாக தனி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: