×

நீடாமங்கலம் யமுனாம்பாள் அரண்மனை சத்திரத்தை தனியாரிடமிருந்து மீட்டெடுக்க வேண்டும்-மத்தியதொல்பொருள் ஆய்வுத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நீடாமங்கலம் : வரலாற்றுச் சிறப்புமிக்க நீடாமங்கலம் யமுனாம்பாள் அரண்மனைச் சத்திரம் தனியாரிடமிருந்து மீட்டெடுக்க மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தஞ்சை மாவட்டத்தில் கோயிலைச் சார்ந்த சத்திரங்களும், தர்ம நிறுவனங்களால் அமைக்கப்பெற்ற சத்திரங்களும் சேர்த்து 600க்கும் மேற்பட்ட சத்திரங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

தஞ்சாவூர் பகுதியில் சத்திரங்கள் அமைந்த அளவுக்கு தென்னிந்தியாவிலேயே எந்தப் பகுதியிலும் சத்திரங்கள் இல்லை என்பது தஞ்சாவூருக்கே உரிய தனிச் சிறப்புகளில் ஒன்றாகும். கி.பி.1743ம் ஆண்டு முதல் 1937ம் ஆண்டு வரை தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர்கள், ராமேசுவரம் செல்லும் பெருவழியில் யாத்ரீகர்கள் தங்குவதற்காகச் சத்திரங்களை நிறுவியுள்ளனர். இந்தச் சத்திரங்கள் மராட்டிய மன்னர்களின் பெயரில் அல்லது அவர்களின் தாய், மனைவி, சகோதரி, ஆசைநாயகிகளின் பெயரில் அமைக்கப்பட்டுள்ளன.சில சத்திரங்கள் குலதெய்வத்தின் பெயரில் அமையப்பட்டுள்ளன.

மராட்டிய மன்னர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்தச் சத்திரங்களில் பல சிதிலமடைந்து காணப்படுகின்றன. மேலும் பல சத்திரங்களின் கட்டிடங்கள் செடிகொடிகள் மண்டிக் காணப்படுகின்றன. இந்தச் சத்திரங்களை நிர்வாகிப்பதற்காக இன்றளவும் சத்திர நிர்வாகம் என்ற தனிப்பிரிவு தஞ்சாவூரில் கலெக்டரை தலைவராகக் கொண்டு இயங்கி வருகிறது. தஞ்சாவூர் சத்திர நிர்வாகத்துக்குட்பட்ட பல கிராமங்களில்அவற்றுக்கான நிலங்கள் இன்றும் உள்ளன. இதற்கான குத்தகையை மட்டும் சத்திரங்களின் நிர்வாகம் வசூலித்து வருகிறது.

தஞ்சாவூர், ஒரத்தநாடு, நீடாமங்கலம், ராசாமடம் போன்ற இடங்களில் உள்ள சத்திரங்கள் பள்ளி மாணவர்கள் தங்கிப் பயிலும் விடுதிகளாக முன்பு செயல்பட்டு வந்தன. சத்திரங்களின் கட்டுமானங்கள் பலவீனமடைந்து வந்ததால், தற்போது மாணவர் விடுதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டியமன்னர் பிரதாபசிம்மரால் தனது ஆசைநாயகி யமுனாம்பாள் பெயரில் நீடாமங்கலம் அரண்மனை சத்திரம் கட்டப்பட்டது. யமுனாம்பாள் அந்த அரண்மனையில் தங்கி வாழ்ந்து வந்துள்ளார். பள்ளி மாணவிகளுக்கான விடுதியும் நடத்தப்பட்டு வந்துள்ளது.இந்த அரண்மனையில் தஞ்சாவூர் சென்றுவர சுரங்கப் பாதையும் இருந்துள்ளது. அரண்மனை கதவுகளின் ஒவியங்கள் தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் ஆய்வு செய்யப்பட்டது. தற்போது அரண்மனை சத்திரம் பொலிவற்ற நிலையில் உள்ளது.

தஞ்சாவூர் கலெக்டரின் நிர்வாகத்திற்குட்பட்டது. தஞ்சாவூர் சத்திரம் தாசில்தார் அரண்மனை சத்திரத்தை நிர்வகித்து வருகிறார்.சத்திரம் நிர்வாகத்தினர் வரலாற்று சிறப்புமிக்க மராட்டிய மன்னர்காலத்து அரண்மனை சத்திரம் என கொஞ்சம் கூட கவலைப்படாமல் தனியார்களுக்கு அரண்மனை இடத்தை நீண்டகால குத்தகைக்கு கொடுத்துள்ளது. நீடாமங்கலம் பகுதி மக்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது. எனவே மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையினர் நீடாமங்கலம் யமுனாம்பாள் அரண்மனைச் சத்திரத்தை தன்வசம் மீட்டெடுத்து அரண்மனையை புதுப்பித்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

நீடாமங்கலம் அரண்மனை சத்திர இடங்களை தனியாருக்கு நீண்டகால குத்தகை என்ற பெயரில் மறைமுக விற்பனை செய்த தஞ்சாவூர் சத்திரம் இலாகா தாசில்தார்களை கண்டறிந்து அவர்கள் மீது இலாகா பூர்வ நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதும் நீடாமங்கலம்பகுதி மக்களின் விருப்பமாகும்.தஞ்சாவூர் கலெக்டரும் தொல்பொருள் ஆய்வுத் துறையினரும் இதில் கவனம்செலுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Needamangalam Yamunampal Palace Inn ,Central Archaeological Survey , Needamangalam: The Central Government to reclaim the historic Needamangalam Yamunampal Palace Inn from the Private
× RELATED மத்திய தொல்லியல்துறை சார்பில்...