×

கற்களை வெட்டி எடுக்கும் தடையிலிருந்து விலக்கு கோரி அம்மிக்கல், ஆட்டுக்கல் தயாரிக்கும் தொழிலாளர்கள் 700 பேர் தர்ணா

திருப்பூர் : பனியன் தொழிலாளர் முன்னேற்ற  சங்க பொதுசெயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் ஆட்டுக்கல், அம்மிக்கல் தயாரிக்கும் தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி  தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த  மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர், ஊத்துக்குளி வட்டத்திற்குட்பட்ட  கோவிந்தம்பாளையம், நல்லகட்டிபாளையம், பெத்தம்பாளையம், வெள்ளியம்பாளையம்  உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த 4500 க்கும் மேற்பட்ட குடும்பங்களை  சேர்ந்தவர்கள் ஆட்டுக்கல், அம்மிக்கல், இஞ்சி பூண்டுக்கல் மற்றும்  கிரைண்டர்கல் ஆகியவற்றை வடிவமைத்து விற்கின்றனர். இது குடிசை தொழிலாகும்.

இந்த  தொழிலுக்கு தேவையான கற்களை வெட்டி எடுப்பதற்கு உயர்நீதிமன்றம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது. இந்த தொழிலில் வெடி மருந்தை பயன்படுத்தி பாறைகளை தகர்க்கின்ற  முறை கையாளப்படுவதில்லை. பாறைக்குழியில் தண்ணீர் ஊற்றி, டிரில் செய்தும்,  கைகளால் உடைத்தும் கற்களை வடிவமைத்து எடுப்பதால் காற்று மாசுபடுத்தும்  புகையும் வருவதில்லை.
இதனால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து  ஏற்படுத்தும் முறையோ, காற்றை மாசுபடுத்தும் புகையோ இல்லை என்பதால் எந்தவித  சுகாதாரப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. நாங்கள் 5 முதல் 50 சென்ட் வரையிலான  பட்டா நிலத்தில் தான்  தொழில் செய்து வருகிறோம்.

இதனால் நாங்கள் அரசிடம்  லைசன்ஸ் பெறவில்லை. 1 ஹெக்டர் அளவில் தொழில் செய்தால்தான் லைசன்ஸ் பெற  முடியும் என்ற நிலை உள்ளது. எங்களை தொழில் செய்ய அனுமதிக்கின்ற முறையில்  மாவட்ட நிர்வாகம் மாநில அரசுக்கும், உயர்நீதி மன்றத்திற்கும் உரிய விளக்கம்  அளித்து உயர்நீதிமன்றத் தடையிலிருந்து இத்தகைய தொழிலுக்கு மட்டும்  விலக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கொரோனா  காலத்தாலும், உயர்நீதி மன்ற தீர்ப்பாலும் கடந்த 5 மாதமாக தொழில் இல்லாமல்  இருக்கும் எங்களுக்கு பண்டிகைகளை கொண்டாட அரசு சார்பில் நிவாரணம் வழங்க  வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

Tags : Ammikal ,Darna , Tiruppur: Banyan Workers' Progressive Union general secretary Ramakrishnan
× RELATED இன்று மே 1ம் தேதி தொழிலாளர் தினம்;...