×

போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வாங்கடே மீதான பண பேர புகார் பற்றி விசாரணை தேவை!: மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் வலியுறுத்தல்..!!

மும்பை: போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வாங்கடே மீதான பண பேர புகார் பற்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் வலியுறுத்தியிருக்கிறார். நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை போதைப்பொருள் வழக்கில் இருந்து விடுவிக்க 25 கோடி ரூபாய் வரை பேரம் நடைபெற்றதாக முக்கிய சாட்சி பிரபாகர் குற்றம்சாட்டினார். இந்த தகவல் மகாராஷ்டிரா மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக பெயர் தெரிவிக்காத போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவரிடமிருந்து தனக்கு கடிதம் வந்திருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிரா மாநில அமைச்சருமான நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தை போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குநருக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும், சமீர் வாங்கடேவுக்கு எதிரான பண பேர புகார் மீதான விசாரணையில் இந்த கடித்ததை சேர்க்க வேண்டும் என கோரி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தனி நபர்கள் இரண்டு பேர் மூலமாக சட்டவிரோதமாக தொலைபேசிகளை சமீர் வாங்கடே ஒட்டுக்கேட்டதாகவும் நவாப் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார். தனக்கு வந்த கடிதத்தின் மூலமாக ஏராளமான பொய் வழக்குகள் புனையப்பட்டிருப்பது தெரியவந்திருப்பதாகவும் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். இது தொடர்பான விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Tags : Nawab Malik ,Drug Prevention ,Division Officer ,Samir Gaday ,Maharashtra ,Minister , Drugs, Samir Wangade, Minister Nawab Malik
× RELATED வெளிநாடுகளுக்கு போதை பொருட்கள்...