அமைதியான மாநிலம் என பெயர் பெற்ற புதுச்சேரி தற்போது கொலை நகரமாக மாறி வருகிறது!: நாராயணசாமி குற்றச்சாட்டு..!!

புதுச்சேரி: அமைதியான மாநிலம் என பெயர் பெற்ற புதுச்சேரி தற்போது கொலை நகரமாக மாறியுள்ளது என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் புதுச்சேரியில் அமைதி சீர்குலைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. போலி ஆவணங்களை உருவாக்கி வீடுகள் அபகரிக்கப்படுகின்றன. இது தொடர் கதையாக இருந்து வருகிறது. காரைக்காலில் நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு அரசியல் கட்சியின் முக்கிய தலைவர் ஒரு கும்பலால் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டார். மீண்டும், இரண்டு நாட்களுக்கு முன், இங்குள்ள வாணரப்பேட்டையில் பட்டப்பகலில் இரட்டைக் கொலை நடந்தது.

ரங்கசாமி முதல்வராக பதவியேற்ற பிறகு இந்த ஆட்சியில் கடந்த 6 மாதத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். புதுச்சேரி மாநிலம் ஒரு அமைதியான மாநிலம் என்ற நிலை தற்போது மாறி புதுச்சேரி ஒரு கொலை நகரம் என்ற ஒரு நிலைக்கு வந்திருக்கிறது என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், ஆளும் கட்சி உறுப்பினர்களாலேயே தொழிலதிபர்கள் பணத்திற்காக அச்சுறுத்தப்படுகிறார்கள். ரங்கசாமி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. சமீபத்திய கொலை சம்பவங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர்.

சமூக விரோதிகளின் செயல்பாடுகளை அரசு கட்டுப்படுத்த தவறினால், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாலும், தொழில்துறை நடவடிக்கைகளில் ஏற்படும் இடையூறுகளாலும் யூனியன் பிரதேசம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் கூறினார். மேலும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.

Related Stories: