மேலூர், கொட்டாம்பட்டி பகுதிகளில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த மழை

*பல கண்மாய்கள் உடைப்பு    

*வீடுகள், நெற்பயிரை சூழ்ந்த நீர்

மேலூர் : மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி பகுதியில் விடிய, விடிய கொட்டிய மழையால், பல கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டு, நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. மேலும் குடியிருப்புக்களில் நுழைந்த நீரால் சில வீடுகள் இடிந்து சேதமானது.மதுரை மாவட்டம், மேலூர் அருகே அழகர்கோவில் அடிவாரத்தில் உள்ள மேலவளவு கருப்பு கோயில் பரம்புக்கண்மாய் 12 வருடங்களுக்கு பிறகு நிறைந்து, தண்ணீர் வெள்ளமாக வெளியேறியது. இதனால் அப்பகுதியில் மேலவளவு, புலிப்பட்டி கிராமங்களில் நடவு செய்யப்பட்டிருந்த 300 ஏக்கர் நெற்பயிர்கள், வாழை ஆகியவை நீரில் மூழ்கியது. மேலும் கண்மாய்ப்பட்டி, ஆதிதிராவிடர் காலனி, மேலவளவு, புலிப்பட்டி பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளையும் நீர் சூழ்ந்தது.

இதனால் சில வீடுகளின் பக்கவாட்டுச் சுவர்கள் இடிந்து விழுந்தன. இதன் காரணமாக இப்பகுதி கிராம மக்கள் இரவு முழுவதும் தூங்காமல் அச்சத்துடன் இரவை கழித்தனர். இதே போல் கொட்டாம்பட்டி பகுதியில் உள்ள பட்டூர் ஊராட்சிக்குட்பட்ட முத்துப்பட்டி ராவுத்தர் கண்மாய், அய்யர் கண்மாய் ஆகியவற்றில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களுக்குள் நீர் புகுந்தது. இதனால் பல ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வருவாய் துறை, வேளாண் துறையினருக்கு புகார் அளித்தும் யாரும் வரவில்லை என குற்றம் சாட்டினர்.

மேலும் கேசம்பட்டி அருகே உள்ள செட்டிஅம்பலம் கண்மாயில் தண்ணீர் நிறைந்ததும், வெளியேறும் பாதையில் அடைப்பு இருந்ததால், கண்மாய் உடைந்து தண்ணீர் வயல் வெளியில் புகுந்தது. இதனால் அப்பகுதியில் பல ஏக்கர் நிலங்களில் பயிர் செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமானது. இந்த கண்மாய் அதிமுக ஆட்சியின் போது குடிமராமத்து செய்யப்பட்ட கண்மாய் என்பது குறிப்பிடத்தக்கது.வருவாய் துறையினரும், வேளாண் துறையினரும் விரைந்து செயல்பட்டு, விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து கண்டறிய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More