×

கழிவுநீர் புகார் எதிரொலி!: மேட்டூர் அணையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!!

சேலம்: சன் செய்தி எதிரொலியாக மேட்டூர் அணையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேட்டூர் அணையில் காவிரி கரையோரம் உள்ள ஆலை கழிவுகள் மற்றும் பெங்களூரு மாநகர கழிவுகள் தினந்தோறும் கோடிகணக்கான லிட்டர் கலப்பதாக எழுந்த புகாரை அடுத்து சன் டிவியில் செய்தி வெளியானது. இதையடுத்து மேட்டூர் நீர்த்தேக்கத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். நீர்த்தேக்க பகுதிகளான பண்ணவாடி, கோட்டையூர், நாகமரை, மூலக்காடு, திப்பம்பட்டி, கீரைக்காரனூர் உள்ளிட்ட பகுதிகளில் கர்நாடகாவில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனக் கழிவு நீர் கரை ஒதுங்கி துர்நாற்றம் வீசுவதோடு காவிரி நீர் நிறம் மாறி வருவதாக புகார் எழுந்தது.

இதனால் காவிரி கரையோர மக்கள் சுவாசிக்க முடியாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். புகார் தொடர்பாக ஆய்வு செய்த அதிகாரிகள் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் மாதிரிகளை சேகரித்து சென்றுள்ளனர். மாதிரி நீர் ஆய்வு செய்யப்பட்ட பிறகு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோதனை முடிவுகள் வெளியான பிறகு எந்த வகையான கழிவுகள் கலந்துள்ளது என்பது குறித்து தெரியவரும்.


Tags : Board ,Mettur Dam , Sewage, Mettur Dam, Pollution Control Officers
× RELATED பெரம்பலூரில் மின்கம்பிகளை உரசிய மரக்கிளைகளை அகற்றும் பணி