×

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு!: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் 2வது நாளாக லஞ்சஒழிப்புத்துறை விசாரணை..!!

சென்னை: சொத்துகுவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 2வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விசாரணை தொடர்பாக 2வது நாளாக சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்சஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகியிருக்கிறார். அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது உறவினர், நண்பர்கள் என சுமார் 26 இடங்களில் கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 25 லட்சம் ரொக்கம், தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என விஜயபாஸ்கருக்கு கடந்த செப்டம்பர் 30ம் தேதி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் உள்ளாட்சி தேர்தலை காரணம் காட்டி, தான் விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் வேண்டும் என கேட்டிருந்தார். அந்த அடிப்படையில் 2வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டு நேற்று சென்னை ஆலந்தூரில் லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை தெற்கு மண்டல கண்காணிப்பாளர் சண்முகம், கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் நடராஜன் ஆகிய இருவரும் கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினார்கள்.

அமைச்சர் ஆவதற்கு முன்பு எந்த மாதிரியான தொழில் செய்தார், அதன் பின்னர் என்ன புதிய தொழில்களை தொடங்கினார், வருமானம் வந்த விவரம், வங்கி பணப்பரிவர்த்தனை குறித்து பல்வேறு கேள்வி எழுப்பப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2வது நாளாக இன்றும் விஜயபாஸ்கரிடம் லஞ்சஒழிப்புத்துறை உயரதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று நடத்தப்படும் விசாரணையில் பல முக்கிய தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே விஜயபாஸ்கரின் நண்பரும் மருத்துவருமான செல்வராஜின் வீடு, மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.


Tags : AIADMK ,minister ,MR Vijayabaskar , Property, MR Vijayabaskar, Anti-Corruption Department
× RELATED அதிமுகவினர் வேண்டுமென்றே தகராறு...