×

வடகிழக்கு பருவமழை : வெள்ளப் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவது, உணவு இருப்பிடம் ஏற்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின்  காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் அதிக அளவில் மழைப் பொழிவு  கிடைக்கிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்த நிலையில், நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதையொட்டி கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் 76 சதவீத அளவுக்கு நிரம்பியுள்ளன. தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில், நாளை முதல் வடகிழக்கு பருவமழை  தொடங்க உள்ளதால் அதிக மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடகிழக்கு பருவமழை காலத்தில்  அதிக மழைப்பொழிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் ஏரி, குளங்கள், வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. சென்னையில் மழைநீர் கால்வாய்களும் முழுமையாக தூர்வாரப்பட்டு வருகின்றன. முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் ஒவ்வொரு மண்டலத்துக்கும் சிறப்பு அதிகாரிகளை நியமித்து நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார். அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தந்த மாவட்டங்களில் மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர்களுடன் இணைந்து செயலாற்ற உள்ளனர்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்தபடி மாவட்ட கலெக்டர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் பல்வேறு மாவட்ட கலெக்டர்கள் காணொலி வாயிலாக பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் அரசுத்துறை செயலாளர்களும், உயர் அதிகாரிகளும் பங்கேற்றுனர். கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, வருவாய் பேரிடர் துறை முதன்மை  செயலாளர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் என்னென்ன முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவாக கலந்துரையாடி வருகிறார்.

அப்போது மழை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைகளை வழங்குகிறார். குறிப்பாக, நீர்வழிப் பாதைகளை சீரமைப்பது, பொதுமக்களுக்கான போதிய  பாதுகாப்பு மையங்களை தயார் நிலையில் வைப்பது குறித்து பல்வேறு  அறிவுறுத்தல்களை இக்கூட்டத்தில் முதல்வர் வழங்குவார் என்று தெரிகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை, புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. இவற்றை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே வரும் 28ம் தேதி வரை டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Tags : Principal ,Stalin , வடகிழக்கு பருவமழை
× RELATED கோடையில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும்