பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங். கூட்டணி உடைகிறது?: காங். மேலிடப் பொறுப்பாளரை புத்தியற்றவர் என கூறிய லாலு பிரசாத்..வலுக்கும் கட்டணங்கள்..!!

பாட்னா: பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் இடையேயான தேர்தல் கூட்டணி விரைவில் முடிவுக்கு வர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக பீகார் காங்கிரஸ் பொறுப்பாளர் பக்த் சரண் தாஸை புத்தியற்றவர் என்று ராஷ்ட்ரீய ஜனதா கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  பீகாரில் தாராப்பூர் மற்றும் குஷ்வர் அஸ்தான் தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர் 30ம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால் இந்த தொகுதிகளில் காங்கிரஸ் தனது வேட்பாளர்களை அறிவித்திருப்பது மெகா கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் எதிர்வரும் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களே போட்டியிடுவார்கள் என காங்கிரசின் பீகார் மாநில மேலிட பொறுப்பாளர் பக்த் சரண் தாஸ் கூறியிருந்தார். இதற்கு டெல்லியில் பதிலளித்த லாலு பிரசாத் யாதவ், தோல்வியடைவதற்காக, டெபாசிட் இழப்பதற்காக அனைத்தையும் காங்கிரஸிடம் நாங்கள் கொடுக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் பொறுப்பாளர் தற்போது 2024ம் ஆண்டு நடக்கவுள்ள மக்களவை தேர்தல் குறித்து பேசுவது ஏன்? என ராஷ்ட்ரீய ஜனதாவின் மாநில தலைவர் ஜெகன்நாத் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கவுள்ள நிலையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: