டெல்டாவில் விடிய விடிய கனமழை: திருவாரூர் தியாகராஜர் கோயில் குளம் சுவர் இடிந்தது

திருச்சி:  வட கிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு  மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. டெல்டா  மாவட்டங்களிலும் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய  பலத்த மழை பெய்தது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12.30 மணி முதல் 1மணி வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

இந்த மழையால் திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜ சுவாமி கோயிலுக்கு சொந்தமான நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள கமலாலய தெப்பக்குளத்தின் தென்கரையின் சுற்றுச்சுவர் 100 அடி தூரம் இடிந்து குளத்திற்குள் விழுந்தது. நள்ளிரவு நேரத்தில் இடிந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. இதனால், புதுக்கோட்டையில் சாந்தாராமன் கோயில் வளாகத்துக்குள் மழைநீர் புகுந்தது. இதே போல் தஞ்சை, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் 2 மணி வரை மழை பெய்தது. திருச்சி மாவட்டத்திலும் இடி, மின்னலுடன் விடிய விடிய மழை பெய்தது.  இரவு 10 மணியளவில் இடி விழுந்ததில் வீட்டிலிருந்த இனாம்குளத்தூர்  சின்னாளப்பட்டியை சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்தனர்.

மின்னல் தாக்கி  3 பேர் பலி

கடலூர் மாவட்டம், திட்டக்குடி கிளிமங்கலத்தை சேர்ந்தவர் வேலாயுதம்(60). அதே பகுதியை சேர்ந்தவர் சங்கர் (55). விவசாய கூலித்தொழிலாளிகளான இருவரும், திருச்சி அடுத்த திருவெறும்பூர் பத்தாளப்பேட்டை பகுதியில் தங்கி விவசாய நடவு பணி செய்துள்ளனர். நேற்று மாலை வயலில் வேலை செய்து கொண்டிருந்த இருவரும், இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் ஒதுங்குவதற்காக வந்தபோது மின்னல் தாக்கியது. இதில் வேலாயுதம் உயிரிழந்தார். சங்கர் காயத்துடன் உயிர் தப்பினார். தஞ்சை மாவட்டம் இந்தலூர் நெடுங்குளம் பகுதியை சேர்ந்த ரெங்கம்மாள்(45), கிளியூர் பகுதியில் நாற்று நடும் பணியில் நேற்று மாலை ஈடுபட்டிருந்த போது மின்னல் தாக்கி பலியானார். தஞ்சை  மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் இருந்து கிழக்கே 5கடல்  மைல் தூரத்தில், மீன் பிடித்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் மீனவர் கருப்பையா (37) பலியானார்.

Related Stories:

More