×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்: ஜெ. கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் உள்பட 2 பேர் கைது: சாட்சியங்களை கலைத்ததாக போலீசார் அதிரடி

சேலம்: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக, சாட்சியங்களை கலைத்ததாக கார் டிரைவர் கனகராஜின் சகோதரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இருவரையும் கூடலூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் இருக்கிறது. இங்கு கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி நள்ளிரவு எஸ்டேட்டிற்குள் நுழைந்த கும்பல், பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை கொலை செய்துவிட்டு பங்களாவுக்குள் இருந்த சொத்து ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது. இச்சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் உட்பட 11 பேர் ஈடுபட்டிருந்ததை ஊட்டி போலீசார் கண்டுபிடித்தனர்.

இச்சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள சந்தனகிரி என்ற இடத்தில் நடந்த விபத்தில் மர்மமான முறையில் டிரைவர் கனகராஜ் உயிரிழந்தார். அதே நேரத்தில் இந்த வழக்கில் தொடர்புடைய கேரளாவை சேர்ந்த சயான் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் அவரது மனைவி, குழந்தை ஆகியோர் உயிரிழந்தனர். சயான் உயிர் தப்பினார். இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் பல்வேறு சந்தேகம் இருப்பதால் மீண்டும் விசாரிக்க வேண்டும் என சயான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதே போல கனகராஜின் மனைவி, அண்ணன் தனபால் ஆகியோரும் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்நிலையில் கனகராஜ் மர்மசாவு வழக்கு சேலம் மாவட்ட எஸ்.பி.ஸ்ரீஅபிநவ் உத்தரவின்பேரில் மீண்டும் விசாரிக்கப்படுகிறது. கொடநாடு வழக்கை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு சேலம் வந்த ஐஜி சுதாகர் ஆத்தூரில் விசாரணை நடத்தினார். மேலும் கனகராஜின் அண்ணன் தனபாலை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படையில் வைத்து கடந்த 3 நாட்களாக விசாரித்தனர். அதே போல இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. இதில், கூட்டுறவு வங்கி தலைவர் ஒருவர் மீது, தனபால் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அவரையும் விசாரிக்க வேண்டும் என தனிப்படை போலீசாரிடம் கூறியுள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில் இடைப்பாடி பகுதியில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஒருவரையும் விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். கனகராஜ் விபத்து குறித்து எஸ்.பி. அலுவலகத்திற்கு முதலில் தகவல் தெரிவித்தது அந்த இன்ஸ்பெக்டர் தான்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘வழக்கில் இதுவரை விசாரிக்கப்பட்ட சாட்சிகள் உள்பட அனைவரிடமும் மறுவிசாரணை நடத்தி வருகிறோம். ஒவ்வொருவரும் ஒரு தகவலை தெரிவித்து வருகின்றனர். அவர்கள் தெரிவிக்கும் தகவல்களில் ஆதாரம் இருக்கும்பட்சத்தில் அனைவரையும் விசாரணைக்கு அழைப்போம்,’’ என்றார். இதனிடையே, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், திடீர் திருப்பமாக, கனகராஜின் அண்ணன் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்து கூடலூருக்கு அழைத்துச்சென்றனர். அந்த வழக்கை விசாரித்து வரும், தனிப்படை போலீசாரின் விசாரணையில், இவர்கள் சாட்சியங்களை கலைத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, இருவரையும் கைது செய்துள்ளனர். அவர்களை கூடலூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தியதையடுத்து நவம்பர் 8ம்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் கூடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tags : Kodanadu ,J. Two ,Kanagaraj , Kodanadu murder
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக...