×

கொரோனா நோயாளிகளை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு சித்த மருத்துவத்தில் ஆராய்ச்சிகளை மேம்படுத்துவது மிகவும் அவசியம்: துணைவேந்தர் சுதா சேஷய்யன் தகவல்

சென்னை: சித்தா கொரோனா  நோயாளிகளைக்  குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்ததை எவரும் மறுக்க இயலாது என்று தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் கூறினார். சென்னை கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவத்தில் சிறப்பு சிகிச்சை முறைகள் என்ற தலைப்பில் பாரம்பரிய மருத்துவர்களுக்கான தொடர் மருத்துவக் கல்வி நிகழ்வு நேற்று தொடங்கப்பட்டது. ஒன்றிய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் நிதியுதவியுடன் நடத்தப்படும் இத்தொடர் நிகழ்வு வரும் 30ம் தேதி வரை பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கிறது. வர்மம், தொக்கணம், யோகம், காயகல்பம், அட்டைவிடல், காரநூல் சிகிச்சை, சுட்டிகை, புற மருத்துவம், புற்றுநோய் மருத்துவம், எலும்பு முறிவு மருத்துவம், குழந்தையின்மை மருத்துவம் மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கான மருத்துவம் ஆகிய தலைப்புகளில் நாடு முழுவதும் இருந்து துறைசார் வல்லுநர்கள் பங்கேற்று அதில் உரையாற்றுகின்றனர்.

இந்நிலையில் நேற்று நடந்த தொடக்க நிகழ்ச்சியில், சித்த மருத்துவ பேராசிரியரும், தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவருமான ஜெயப்பிரகாஷ் நாராயணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பல்கலைக்கழக பதிவாளர் அஸ்வத் நாராயணன், பல்கலைக்கழக சித்த மருத்துவத் துறை தலைவர் கபிலன் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் துணைவேந்தர் சுதா சேஷய்யன் கூறியதாவது: நாட்டின் தொன்மையான மருத்துவ முறைகளில் ஒன்றான சித்தா ெகாரோனா நோயாளிகளைக் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்ததை எவரும் மறுக்க இயலாது. ஒருபுறம் அந்த மருத்துவ முறைகள் குறித்து பல்வேறு பெருமைகளை நாம் பேசி வந்தாலும், கால சூழலுக்கு தக்கவாறு சில விஷயங்களை அதில் மேம்படுத்துவது அவசியம் ஆகும்.

சித்த மருத்துவத்தில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும். அதனுடன் அந்த மருத்துவ முறையை தரப்படுத்துதலும் இன்றியமையா தேவையாக உள்ளது. சித்தர்கள் அருளிய அந்த மருத்துவ முறையில் குறிப்பிட்டிருக்கும் மூலிகைகளின் அளவுகள்,  குணங்கள் தற்போது எவ்வாறு பயன்பாட்டில் உள்ளன என்பதை ஆராய வேண்டும். ஏனென்றால் பொதிகை மலையில் உள்ள மூலிகைகளின் குணத்துக்கும், அதே மூலிகைகள் வேறு மண் பரப்பில் வளரும் போது ஏற்படும் மாற்றத்துக்கும் வேறுபாடு உள்ளது. அவற்றை பகுப்பாய்ந்து சித்த மருத்துவத்தை மேம்படுத்துவதே தற்போதைய தலையாய தேவை ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Vice Chancellor ,Sudha Seshayyan , Vice-Chancellor Sudha Seshayyan, Information
× RELATED மீனவர்கள் மீன் வளர்ப்பில் நவீன...