சென்னையில் கஞ்சா சப்ளை திருச்சியில் பதுங்கியிருந்த எண்ணூர் ரவுடி கைது: கூட்டாளிகளும் சிக்கினர்

திருவொற்றியூர்: எண்ணூர், அத்திப்பட்டு மேம்பாலம் அருகே போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த நபரை மடக்கி சோதனை செய்தபோது, அவரிடம் 22 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர், பெரம்பூரை சேர்ந்த கார்த்திகேயன் (40) என்பதும், பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரனின் கூட்டாளி என்பதும் தெரிந்தது. மேலும் விசாரணையில், ரவுடி தனசேகரன் ஆந்திராவில் இருந்து கார்த்திகேயன் மூலம் கஞ்சா கடத்தி வந்து, சென்னையில் விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து, கார்த்திகேயனை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அவர் அளித்த தகவலின் பேரில், திருச்சி திருவெறும்பூர் கோகுல்  நகரில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் (40), அவரது கூட்டாளிகள் சசிகுமார் (24), மதிவாணன் (26) ஆகியோரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து, எண்ணூர் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள தனசேகரனின் கூட்டாளிகள் அம்பத், கட்டை ரவி ஆகியோரை தேடி வருகின்றனர். எண்ணூர் தனசேகரன் மீது 7 கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் போன்ற 40 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More