மாதம் ரூ.30 ஆயிரம் தருவதாக 100 கார்கள் மோசடி: ஒருவர் கைது

அண்ணா நகர்: சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் சிவபெருமாள்(29). டிராவல்ஸ் நிறுவன அதிபர். சென்னை மவுலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் கௌதம்ராஜ்(40), அருண்குமார்(29), சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் அன்சாரிபாய்(35). இவர்கள், முகப்பேர் கிழக்கு திருவள்ளுர் சாலையில், நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். இங்கு அருண்குமார் மேனேஜராக பணியாற்றி வந்தார். இந்நிலையில்,  அவர்கள், கொரோனா காலத்தில், கார் ஓட்ட முடியாமல், வருமானம் இன்றி, அவதிப்படுபவர்கள், தங்கள் காரை, எங்கள் நிறுவனத்துக்கு கொடுத்தால், மாதம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை பணம் கொடுப்போம் என விளம்பரம்  செய்தனர். இதனை நம்பிய சிவபெருமாள் உட்பட 100 பேர், அந்நிறுவனத்தில், தங்களது கார்களை ஒப்படைத்தனர். இதனையடுத்து, ஒன்றிரண்டு மாதங்கள், ரூ.30,000 கொடுத்த அவர்கள், திடீரென தலைமறைவாகி விட்டனர்.  

இது குறித்து, சிவபெருமாள் நொளம்பூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார், அந்த 3 பேரையும் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 22ம் தேதி  அன்றுமேனேஜர் அருண்குமார் தாம்பரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இதனையடுத்து, போலீசார் அவரை 4 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை செய்தனர். அதில், இவர்கள் விளம்பரம் மூலம் 100க்கும் மேற்பட்டவர்களிடம் காரை வாங்கி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி உட்பட பல மாவட்டங்களில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. மேலும், இவர் கொடுத்த தகவலின்படி திருச்சி , ஈரோடு , மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து, 5 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், அருண்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: