ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது: ஜனாதிபதியை சந்தித்த பிறகு சந்திரபாபு நாயுடு பேட்டி

திருமலை: டெல்லியில் ஜனாதிபதியை சந்தித்த தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, அவரது எம்பிக்கள், மூத்த நிர்வாகிகளுடன் நேற்று டெல்லி சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து, ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரால் தங்கள் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டது குறித்து புகார் அளித்தார். இதையடுத்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இதனை விமர்சனம் செய்யும் எதிர்கட்சியினர் மீது ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தி வந்தனர்.

இறுதியாக மாநிலம் முழுவதும் கட்சி அலுவலகங்களிலும், கட்சியின் தலைமை அலுவலகத்திலும் நுழைந்து சூறையாடினர். இதன் மீது ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவும், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவும் கோரிக்கை விடுத்தோம். போதை மருந்து, கஞ்சா கடத்தல் குறித்து மத்திய அரசு தனி குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநில டிஜிபி வேடிக்கை பார்த்து கொண்டுள்ளார். அவரை உடனடியாக திரும்பபெறுவதோடு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.  ஆந்திராவில் ஆளும் கட்சியினரால் தொழிற்சாலை உரிமையாளர்கள் பலர் அச்சத்தில் உள்ளனர். எனவே, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என கூறியுள்ளோம். இதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: