×

வீடுகளை விட்டு வெளியே வர மக்களுக்கு தடை: சீனாவை மிரட்டும் டெல்டா வைரஸ்: மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்

பீஜிங்: சீனாவில் டெல்டா வகை வைரஸ் அடுத்த சில நாட்களில் மிகப்பெரிய அளவில் பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், டெல்டா வைரஸ் பரவல் மையமான இஜினா நகரத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.  கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனா, கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக மிக விரைவாக வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தியது. உலகம் முழுவதும் பல அலைகளாக கொரோனா மிரட்டினாலும், சீனாவில் 2வது அலை ஏற்படவே இல்லை. இந்தியாவில் டெல்டா வைரசால் கடும் பாதிப்பு ஏற்பட்ட போதிலும், சீனா தப்பியது. தற்போது உலகமே கொரோனா பிடியிலிருந்து மீண்டு, இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் சீனாவில் டெல்டா வைரஸ் பரவத் தொடங்கியிருப்பது அந்நாட்டு மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

மங்கோலியா நாட்டை ஒட்டிய சீன கட்டுப்பாட்டில் உள்ள இஜினா நகரம் டெல்டா வைரஸ் ஹாட்ஸ்பாட்டாக உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் சீனா முழுவதும் 150 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 3ல் 2 பங்கு பேருக்கு இஜினா பகுதியை சேர்ந்தவர்கள். இஜினா தவிர கான்சு, நிங்சியா, பீஜிங், ஹூபெய், ஹூனான் ஆகிய 11 மாகாணங்களிலும் புதிய வைரஸ் தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் காரணமாக சீன அரசு மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது.

இஜினா நகரில் வசிக்கும் 37,500 குடும்பங்களும் மறு உத்தரவு வரும் வரை வீட்டை விட்டு வெளியேவரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மீறினால் சட்ட நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் இருந்து யாரும் இஜினா நகருக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கான்சு மாகாணத்தின் லான்சோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பஸ், டாக்சி சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொற்று பாதிப்புள்ள எவரும் தலைநகர் பீஜிங்கில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பீஜிங் வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ளது. சுற்றுலா தொடர்பான அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுற்றுலா நடவடிக்கைகள் பெரிதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சீனாவின் இந்த திடீர் நடவடிக்கைகளால் அந்நாட்டு மக்கள் மீண்டும் பதற்றமடைந்துள்ளனர்.

Tags : Delta ,China , Delta virus
× RELATED தென், டெல்டா மாவட்டங்களில் 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு