12,000 கோடிக்கு ஏலம்!: ஐபிஎல் தொடரில் புதிதாக அகமதாபாத், லக்னோ: பிசிசிஐ அறிவிப்பு

துபாய்: ஐபிஎல் டி20 தொடரின் 15வது சீசனில் புதிதாக அகமதாபாத், லக்னோ அணிகள் களமிறங்குகின்றன. இதற்கான டெண்டரில், இந்த அணிகளை 12,000 கோடிக்கு பிரபல நிறுவனங்கள் வாங்கின. 2022 ஐபிஎல் சீசனில் கூடுதலாக 2 அணிகளை சேர்க்க முடிவு செய்த பிசிசிஐ, இதற்கான டெண்டர் நடைமுறையை கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியிட்டது. விண்ணப்ப கட்டணம் 10 லட்சமாகவும், அடிப்படை விலை 2,000 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மொத்தம் 22 நிறுவனங்கள் சார்பில் ஒப்பந்தப்புள்ளிகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், புதிய அணிகளுக்கான டெண்டர் திறப்பு துபாயில் நேற்று நடந்தது. இதில் பிசிசிஐ நிர்வாகிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின் முடிவில், ஆர்-பி சஞ்சீவ் கோயங்கா (ஆர்பிஎஸ்ஜி) குழுமம் லக்னோ அணியையும், சிவிசி கேப்பிடல் பார்ட்னர்ஸ் அகமதாபாத் அணியையும் வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆர்பிஎஸ்ஜி குழுமம் முன்னதாக ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட் அணியின் உரிமையாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

லக்னோ அணியை ஆர்பிஎஸ்ஜி நிறுவனம் சுமார் 7,000 கோடிக்கும், அகமதாபாத் அணியை சிவிசி கேப்பிடல் சுமார் 5,200 கோடிக்கும் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து, ஐபிஎல் 15வது சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளன. இந்த அணிகளுக்கான மெகா வீரர்கள் ஏலமும் விரைவில் நடைபெற உள்ளது.

Related Stories:

More