×

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசுடன் வங்கிகள் கைகோர்க்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப அரசுடன், வங்கிகள் கைகோர்க்க வேணடும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் நீங்கள் இதுவரை தமிழக அரசுக்கும், மக்களுக்கும் செய்துவரும் சேவைகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசும் வங்கிகளும் இந்த நேரத்தில் இணைந்து செயல்படுவது மிக முக்கியமானது என்பதால் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 20 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டிபியுடன் நாட்டிலேயே 2வது பெரிய மாநிலப் பொருளாதாரமாக தமிழ்நாடு உள்ளது. தமிழக அரசு பல்வேறு முக்கிய நலத்திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இது மாநிலத்தின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், மக்களின் வளர்ச்சிக்கு குறிப்பாக சமூகத்தின் ஏழை மற்றும் நலிந்த பிரிவினரின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளது. மக்களும் வளர வேண்டும். தொழில் நிறுவனங்களும் வளர வேண்டும். அரசும் வளர வேண்டும். அதுதான் உண்மையான வளர்ச்சி. இதில் எது ஒன்று தேய்ந்தாலும் அது வளர்ச்சி ஆகாது.

மாநில விற்பனை வரியைக் குறைத்ததன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது. பல்வேறு நிதிச் சுமைக்கு இடையில் தான் இதனை வழங்கினோம். இதற்கு ஒரே காரணம், மக்களைக் காக்க வேண்டும் என்ற அரசின் நோக்கம்தான். நேற்றும், இன்றும், நாளையும் திமுக அரசின் ஒரே நோக்கம் இது ஒன்றுதான். இந்த நோக்கத்துக்கு வங்கிகளும் உதவ வேண்டும். திமுக ஆட்சி என்பது சுயநிதிக் குழுக்களின் பொற்கால ஆட்சி ஆகும். அதனை நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது அதற்கு தனிக்கவனம் செலுத்தி நடத்தினேன். பெண்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு சுயஉதவிக் குழுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இந்த ஆண்டு வங்கிக் கடன் இணைப்புக்கு 20,000 கோடி ரூபாய் இலக்கு உள்ளது. செப்டம்பர் 2021 வரை, 4,951 கோடி ரூபாய் கடன்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இலக்கை அடைய மீதமுள்ள தொகையையும் சேர்த்து வழங்க கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டில், 49.48 லட்சம் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 96.73 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன. சமீப ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள பல்வேறு வங்கிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட 1,37,429 விண்ணப்பங்களில், இதுவரை 35.67 விழுக்காடு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் இத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு கடன்களை அதிகரிக்க அரசு மாநில அளவிலான கடன் உத்தரவாத நிதியை அமைக்கும். கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டது இந்த நிறுவனங்கள் ஆகும். எனவே அதனை மீட்டெடுப்பது அரசின் முக்கியமான இலக்காக அமைந்திருக்கிறது. எனவே அரசின் இரண்டு திட்டங்களையும் வங்கிகள் முழு மனதுடன் ஆதரிக்க வேண்டும். அதேபோல் மாணவர்களுக்கான கல்விக் கடனையும் தமிழக அரசு முக்கியமானதாகக் கருதுகிறது. அந்தக் கல்வியை அடையப் பணம் தடையாக இருக்கக் கூடாது.

இங்குள்ள அனைத்து வங்கிகளும் சமுதாயத்தின் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு கல்விக்கடன் வழங்க வேண்டும். விவசாயிகளுக்குத் தேவையானதைச் செய்து கொடுக்கும் கடமை அரசுக்கும் இருக்கிறது, உங்களைப் போன்ற வங்கிகளுக்கும் இருக்கிறது.  கூட்டுறவு வங்கிகள் மற்றும் வணிக வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கடன் வழங்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதேபோல் அனைத்து வங்கிகளும் செயல்பட வேண்டும். இன்று மீன்பிடித் தொழில் நவீனமாகி வருகிறது. ஆழ்கடல் மீன்பிடி படகுகளைப் பயன்படுத்தியாக வேண்டும். இதனை வாங்குவதற்கு வங்கியாளர்கள் தங்களது உதவிகளைச் செய்தாக வேண்டும்.

 2020-21ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, நிதி அமைச்சர் தாக்கல் செய்தார். அப்போது நிதித்துறையில் ஒரு சிறப்பு பணிக்குழுவை அமைத்தார்கள். அரசின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ய சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது. அனைத்து வங்கிகளும் தங்களது கணக்கு விபரங்களை எங்களுக்கு அளித்துள்ளன. கொரோனா தொற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கும் வரவிருக்கும் நாட்களில் நமக்கு ஒரு பெரிய சவால் உள்ளது. ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசுடன் வங்கிகள் கைகோர்க்க வேண்டும். இந்தச் சந்திப்பு மாநிலத்தின் வளர்ச்சியில் அரசாங்கத்திற்கும் வங்கிகளுக்கும் இடையிலான கூட்டுறவு உறவின் தொடக்கமாக இருக்கும் என்ற எனது நம்பிக்கையை மீண்டும் ஒரு முறை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், மாநில அளவிலான வங்கியாளர் குழு தலைவரும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநரும், முதன்மை செயல் அலுவலருமான பி.பி.சென்குப்தா, இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சுவாமி, நபார்டு முதன்மை பொது மேலாளர் வெங்கடகிருஷ்ணா மற்றும் வங்கிகளின் உயர் அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மக்களும் வளர வேண்டும். தொழில் நிறுவனங்களும் வளர வேண்டும். அரசும் வளர வேண்டும். அதுதான் உண்மையான வளர்ச்சி. இதில் எது ஒன்று தேய்ந்தாலும் அது வளர்ச்சி ஆகாது.

Tags : Tamil Nadu ,Chief Minister ,MK Stalin , Banks should join hands with government to rebuild Tamil Nadu economy affected by corona epidemic: Chief Minister MK Stalin
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...