தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவக்கம்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என்று வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். இதன் காரணமாக, தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளில் இதுவரை நீடித்து வந்த தென்மேற்கு பருவமழை, கேரளாவில் இந்த ஆண்டும் எதிர்பாராத அளவுக்கு மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பெய்த மழையின் காரணமாக 90 சதவீத நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. இதனால், இந்த ஆண்டுக்கான குடிநீர் மற்றும் பாசனத்துக்கான தேவை பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தென்மேற்கு பருவமழை நேற்றுடன் விலகியதை அடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, தென்மேற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதியில் இன்று வளி மண்டல மேலடுக்கு சுழற்சி  ஏற்பட்டு, மேற்கு நோக்கி நகர்ந்து பின்னர் அது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாமக்கல், கரூர், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய  மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள், புதுவை பகுதிகளில் அனேக இடங்களில் லேசான மழையும் பெய்யும். சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

Related Stories:

More
>