×

சார்ஜா, துபாய் விமானத்தில் தங்கம் கடத்தி வந்த இருவர் கைது

சென்னை: சார்ஜா, துபாயிலிருந்து கடத்தி வந்த 3.3 கிலோ தங்கம் பிடிபட்டது. சார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமானநிலைய சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அதில் சிவகங்கையை சேர்ந்த  இருவரின் உள்ளாடைகளுக்குள் 7 பார்சல்களில் 1.5 கிலோ தங்கப்பசை உருண்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அதன் சர்வதேச மதிப்பு ரூ.71.72 லட்சம்.

இதையடுத்து தங்கப்பசை உருண்டைகளை பறிமுதல் செய்து, கடத்தல் பயணிகள் இருவரையும் கைது செய்தனர். இதற்கிடையே சென்னை சர்வதேச விமான நிலையத்தின் வருகை பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் மர்ம பார்சல் ஒன்று கிடந்ததை விமான நிலைய தூய்மை பணியாளர்கள் பார்த்துவிட்டு, மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாயுடன் வந்து மர்ம பார்சலை ஆய்வு செய்தனர். அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை.

இதையடுத்து பார்சலை பாதுகாப்பு அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அதனுள் சில்வர் பேப்பர் பார்சலில் தங்கப்பசை மறைத்து வைத்திருத்ததை கண்டுபிடித்தனர். அதனுள் 1.8 கிலோ தங்கப்பசை இருந்ததை கைப்பற்றி, சென்னை விமானநிலைய சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.87.82 லட்சம். இதையடுத்து சுங்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். இந்த தங்கப்பசை பார்சல் துபாயிலிருந்து வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்டதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். கடத்தல் ஆசாமிகள் பற்றி விமான நிலைய சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.


Tags : Sharjah, ,Dubai , Two arrested for smuggling gold on Sharjah, Dubai flight
× RELATED ரஷித் கான் சுழலில் மூழ்கியது அயர்லாந்து