சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் பயனடையும் பயனாளிகள் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் குறைந்து வருகிறது. பெண் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும் மற்றும் குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும் என்ற கூடுதல் நோக்கங்களையும் கொண்ட இத்திட்டத்தின்படி, கல்வி நிலை உயர்ந்து, தாமதமாக திருமணம் நடைபெறுவதால் பெற்றோரில் ஒருவர் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் வயது அதிகமாகிறது. எனவே முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளுள் ஒன்றான பெண் குழந்தைகள் உள்ள பெற்றோரில் ஒருவர் 35 வயதுக்குள் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டவராக இருத்தல் வேண்டும் என்பதில் உள்ள வயது வரம்பினை 35-லிருந்து 40 ஆக உயர்த்துதல் அவசியமாகிறது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கடந்த செப்டம்பர் 1ம் தேதியன்று சட்டமன்றப் பேரவையில், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளுள் ஒன்றான, பெண் குழந்தைகள் உள்ள பெற்றோரில் ஒருவர் 35 வயதுக்குள் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டவராக இருக்க வேண்டும் என்பதில் உள்ள அந்த வயது வரம்பு 35லிருந்து 40 ஆக உயர்த்தப்படுகிறது” என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையொட்டி, பெண் குழந்தைகள் உள்ள பெற்றோரில் ஒருவர் 35 வயதுக்குள் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டவராக இருக்க வேண்டும் என்பதில் உள்ள அந்த வயது வரம்பினை 35லிருந்து 40 ஆக உயர்த்தி அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
