சொகுசு கப்பலில் போதை விருந்து விவகாரத்தில் ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் கைது பின்னணி என்ன?: பகடைக்காயாக மாற்றப்பட்டதா என்சிபி?

ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக எந்த ஒரு பிரச்னை விஸ்வரூபம் எடுக்கும்போதும், வேறு ஏதோ ஒரு விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பாகி, ஏற்கெனவே உள்ள பிரச்னையை மழுங்கடித்து விடுகிறது என்பது,  பல்வேறு எதிர்க்கட்சிகள் மற்றும் சில அரசியல் விமர்சகர்களால் முன்வைக்கப்படும் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது. இதற்கேற்ப ஒவ்வொரு சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருவதை அரசியல் விமர்சகர்கள், கட்சி தலைவர்கள் உட்பட பலர் சுட்டிக்காட்டி வருகின்றனர். அந்த வகையில், பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் விவகாரம் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 மும்பையில் இருந்து கோவா சென்ற கார்டிலியா சொகுசுக்கப்பலில் போதை விருந்து நடப்பதாக வந்த தகவலை அடுத்து, கடந்த 3ம் தேதி பயணிகள் போல் அதில் சென்ற போதைப்பொருள் அதிகாரிகள் 20 பேர், போதைப்பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டு விட்டனர்.  ஆர்யன் கானிடம் இருந்து 13 கிராம் கோகைன், 5 கிராம் எம்டி , 21 கிராம் கஞ்சா, 22 எம்டிஎம்ஏ போதை மாத்திரைகள் மற்றும் 1.33 லட்சம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

 இந்த வழக்கில் இதுவரை ஆர்யன் கானுக்கு எதிரான ஆதாரமாக கூறப்படுவது, அவரிடம் இருந்து பறிமுதல் செய்ததாக கூறப்படும் மேற்கண்ட போதைப் பொருட்களை விட, வாட்ஸ் ஆப் சாட்டிங்குகள்தான் பிரதான ஆதாரமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. ஜாமீன் வழங்குவதற்கு முட்டுக்கட்டையாக முக்கிய சான்றாவணமாக இதைத்தான் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சமர்ப்பித்துள்ளதாக, சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 ஆர்யன் கான் கைதானதுமே, இது திசை திருப்பும் முயற்சிதான் என்பதை அழுத்தம் திருத்தமாக கூறியது மகாராஷ்டிர காங்கிரஸ்தான். குஜராத் மாநிலத்தில் அதானி குழுமத்தால் நடத்தப்படும் முந்த்ரா துறைமுகத்தில் கடந்த மாதம் வருவாய் புலனாய்வுத்துறை இயக்குனரகம் சார்பில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கிருந்த 2 கன்டெய்னர்களில் இருந்து 2,988.21 கிலோ எடையுள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.  இதன் சர்வதேச சந்தை மதிப்பு 21,000 கோடி.  இந்நிலையில் மும்பையில் கப்பலில் போதை பார்ட்டி நடத்தப்பட்ட விவகாரம் உண்மையில் பிடிபட்ட குஜராத் போதை பொருள் பறிமுதல் விவகாரத்தை திசை திருப்பும் முயற்சி என மகாராஷ்டிரா காங்கிரஸ் தனது குற்றச்சாட்டில் தெரிவித்திருந்தது.  அதோடு, முந்த்ரா துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் தொடர்பாக உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.

 இதுபோல், இந்த போதைப்பொருள் ரெய்டு முழுக்க முழுக்க போலியானதுதான் என்பதை, தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிர அமைச்சருமான நவாப் மாலிக் கூறியிருந்தார். இதற்கான ஆதாரமாக ஒரு வீடியோவையும் அவர் வெளியிட்டார். அதில், சொகுசு கப்பலில் கைது செய்யப்பட்டவர்கள் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அந்த அலுவலகத்துக்குள், ஆர்யன் கானுடன், தனியார் புலனாய்வாளர் கே.பி.கோஸ்வாமி மற்றும் பாஜவை சேர்ந்த மணீஷ் பானுஷாலி ஆகியோர் செல்கின்றனர். கடந்த செப்டம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் மணீஷ் பானுஷாலி குஜராத் அமைச்சர்கள் சிலரை சந்தித்துள்ளார். 21ம் தேதி அதானி நிறுவனம் இயக்கும் முந்த்ரா துறைமுகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆப்கானிஸ்தான் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

 28ம் தேதி வரை அங்கு இருந்துள்ளார். பின்பு அக்டோபர் 3ம் தேதி மும்பை கப்பல் கைது நடவடிக்கையில் எப்படி அவர் கலந்துகொண்டார். ஷாரூக்கானுக்குதான் அவர்கள் குறி வைத்துள்ளனர். சொகுசுக் கப்பலிலோ, துறைமுகத்தின் கப்பல் முனையத்திலோ போதைப்பொருள் கைப்பற்றப்படவில்லை. என்சிபி வீடியோ, அந்த அமைப்பின் மண்டல அலுவலகத்தில் எடுக்கப்பட்டுள்ளது. எனவே கப்பலில் போதை மருந்து கைப்பற்றப்பட்டதாக கூறுவது நாடகம். ஷாரூக்கான்தான் தங்கள் அடுத்த குறி என்று, போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஏற்ெகனவே கூறி வந்ததை நினைவு கூற விரும்புகிறேன் என்று ஆதாரத்துடன் நவாப் மாலிக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கிடையில், வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான பிரபாகர் ரகோஜி செயில், நோட்டரி பப்ளிக் (சான்று உறுதி அலுவலர்) மூலம் பிரமாண பத்திரத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதில், ஆர்யன் கானை விடுவிக்க 25 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், இதில் 18 கோடி இறுதி செய்யப்பட்டதாகவும், இதில் 8 கோடி, இந்த வழக்கை விசாரிக்கும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மும்பை மண்டல இயக்குநர் சமீர் வான்கடேவின் பங்காக பேசப்பட்டதாகவும் அவர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார். இதே வழக்கில் மற்றொரு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள தனியார் துப்பறிவாளர் கிரண் கோசாவியின் மெய்க்காப்பாளர். இந்த கோசாவி, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில், ஆர்யன் கானிடம் வாக்குமூலம் பதிவு செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. இவர்  இதுபோல், ஆர்யன் கானை கைது செய்து அழைத்து வரும்போது, பாஜ தலைவர் மணீஷ் பானுஷாலியும் உடன் வருகிறார். இப்படி இந்த வழக்கில் அடுத்தடுத்து வரும் அதிர்ச்சிகரமான திருப்பங்கள், வழக்கின் நோக்கம் வேறாக உள்ளதையும், மகாராஷ்டிர அரசை களங்கப்படுத்தும் நோக்கில் மும்பை போதைப்பொருட்களின் கூடாரமாக மாறி வருவது போல காட்டுவதாகவும் உள்ளதாக சிலர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். எனவே, அதானி துைறமுகத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் விவகாரத்தை திசை திருப்பவோ, அல்லது மகாராஷ்டிர அரசை குறிவைத்து இது மேற்கொள்ளப்படுகிறதா என்ற கேள்விகள் அரசியல் கட்சியினர் பலராலும் சுட்டிக்காட்டப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புக்கான ஆதாரம் சமூக வலைதளத்தில் இல்லை

பொதுவாக, மிகப்பெரிய குற்றச்சாட்டுகளில், சிக்கும் சிலரது சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையில் சில நடவடிக்கை காணப்படும் என்பது, புலனாய்வு துறையினரின் பொதுவான கருத்து. இதற்கேற்ப, சம்பந்தப்பட்ட நபரின் ‘நெட்வொர்க்’ என்ன என்ற விசாரணையை இங்கிருந்து தொடங்குவார்கள். ஆனால், ஆர்யன் கான் சமூக வலைதள பக்கங்களில் அப்படி எதுவும் இல்லை என்கின்றனர், இதை ஆராய்ந்தவர்கள். உதாரணமாக ஆர்யன் கானின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது பயணங்கள், பல்கலைக்கழகம், தலை முடி ஸ்டைல் போன்றவைதான் இடம்பெற்றிருந்தனவே தவிர, போதைப்பொருள் அல்லது தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதற்கான ‘வாசனை’ கூட, அவரது பதிவுகளில் இல்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related Stories:

More