விரைவில் பிற மாநிலங்களிலும் அமல்: உ.பி.யில் சமையல் எண்ணெய் இருப்புக்கு வரம்பு: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: சமையல் எண்ணெய் இருப்பு வைக்க உத்தர பிரதேச மாநிலத்து வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் பிற மாநிலங்களிலும் அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், சமையல் எண்ணெயின் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, சமையல் எண்ணெய் இருப்பு வைக்க மாநில அரசுகள் வரம்பு நிர்ணயித்து கொள்ள உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உணவுத் துறை செயலர் சுதன்ஷூ பாண்டே பல்வேறு மாநில அரசுகளின் பிரதிநிதிகளுடன் காணொலி மூலம் மாநிலங்களின் சமையல் எண்ணெய் இருப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ``ஏறக்குறைய 23 மாநில அரசுகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். உத்தர பிரதேசத்தில் உள்ள சில்லரை, மொத்த விற்பனை, மொத்த நுகர்வோர், எண்ணெய் நிறுவனங்கள் என அனைவருக்கும் இருப்பு குறித்த விவரம் கடந்த 12ம் தேதி தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 1 முதல் 25 டன் வரை மட்டுமே சமையல் எண்ணெய் இருப்பு வைத்து கொள்ள முடியும். ராஜஸ்தான், குஜராத், அரியானா மாநிலங்களுக்கும் இருப்பு விவரம் பற்றி விரைவில் தகவல் தெரிவிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 9 மாநிலங்கள் சமையல் எண்ணெய் இருப்பு வைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளன. விரைவில் நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் இது செயல்படுத்தப்பட உள்ளது,’’ என்று கூறினார்.

Related Stories:

More
>