ஆவடி சட்டமன்ற தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் 345 பேருக்கு 37.56 லட்சத்தில் உபகரணங்கள்: அமைச்சர் நாசர் வழங்கினார்

ஆவடி: ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்தி கழகம் சார்பாக சமூக பங்களிப்பு நிதியின் கீழ் உபகரணங்கள் வழங்கும் விழா ஆவடியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.  

இந்நிகழ்ச்சியில், ஆவடி தொகுதி எம்எல்ஏவும், பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் கலந்துகொண்டு 345 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி, காது கேளாதவர்களுக்கு காதொலி கருவி, ஊன்று கோல்கள், செயற்கை அவயங்கள், ரோலேட்டர்கள், வடிவமைக்கப்பட்ட கால் தாங்கிகள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு சக்கர நாற்காலி, பார்வையற்றோர்க்கான செல்போன் மற்றும் சிறப்பு தொடுதிரை, மோட்டார் பொருத்திய மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட 637 உதவி உபகரணங்கள் 37.56 லட்சத்தில் வழங்கப்பட்டது.

பின்னர், அமைச்சர் நாசர் பேசியதாவது: தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் எதிர்காலம் வாழ்க்கை நலம் பெற வேண்டும் என்ற உன்னத அடிப்படையில் அரசு தனி கவனம் செலுத்தி ஒவ்வொரு மாவட்டத்திலும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி தொகுதியில் 345 மாற்றுத்திறனாளிகளுக்கு 637 எண்ணிக்கையிலான உதவி உபகரணங்களை வழங்கி உள்ளோம். மாற்றுத்திறனாளிகளை எப்பொழுதும் சகோதரத்தோடு அணுக வேண்டும். அவர்களை எவ்வகையிலும் ஒதுக்காமல் அவர்களுடன் அன்பாக பழக வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் மாற்று திறனை எண்ணி மனம் தளராமல், வாழ்க்கையில் முயற்சி செய்தும் முன்னேற்றம் அடைய வேண்டும். மாற்று திறனாளிகளின் வாழ்க்கையை மேன்மை அடையச் செய்வதற்காக தமிழக முதல்வர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வகுத்து செயல்படுத்தி வருகிறார். மாற்றுத்திறன் என்பது ஒரு சவாலாக எடுத்து கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் தொகுதி எம்பி ஜெயக்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்தி கழக முதுநிலை மேலாளர் அசோக்குமார், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தெற்கு மண்டல நிர்வாக இயக்குனர் சாவந்த் உள்பட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories:

More
>