பூந்தமல்லியில் புதிய கருவூல கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்தார்

பூந்தமல்லி: பூந்தமல்லியில் புதிய கருவூல கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். திருவள்ளூர் மாவட்ட கருவூலம் மற்றும் கணக்குத்துறை, பூந்தமல்லி சார்நிலை கருவூலத்திற்கு 85.89 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் கட்டப்பட்டு வந்தது. கட்டிடத்தின் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைந்தது. இந்நிலையில், இந்த கருவூல கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பூந்தமல்லி சார் நிலை கருவூல புதிய கட்டிடத்தை நேற்று திறந்து வைத்தார். இதில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், கலெக்டர் ஆல்பின் ஜான் வர்கீஸ், மாவட்ட கருவூல அலுவலர் வித்யா கவுரி, பூந்தமல்லி உதவி கருவூல அலுவலர் சந்திரகுமார், மாவட்ட சேர்மன் உமா மகேஸ்வரி, பூந்தமல்லி ஒன்றிய சேர்மன் ஜெயக்குமார், துணை சேர்மன் பரமேஸ்வரி கந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும், இந்த அலுவலகத்தில் 2978 அரசு பணியாளர்கள், 3869 ஓய்வூதியதாரர்கள், 91 பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள், 17 முத்திரைதாள் விற்பனையாளர்கள் பயன்பெறும் வகையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கணினியறை, காப்பறை, பதிவறைகளுடன் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  துறை சார்ந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை அமைச்சர் நாசர் வழங்கினார்.

Related Stories:

More
>