×

சென்னை மட்டுமல்லாது அனைத்து மாநகராட்சிகளிலும் மரங்கள் நடும் பணியை தொடங்குவோம்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: சென்னையில் பசுமைப் பரப்பளவை அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டு சிறப்பாக பராமரித்து வரும் குடியிருப்பு நலச்சங்கங்கள் / தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை பாராட்டி மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து, சிங்காரச் சென்னை திட்டத்தின் கீழ் பூங்காக்கள், போக்குவரத்து தீவுத் திட்டுகள், சாலை மையத்தடுப்புகள் மற்றும் கட்டடங்களின் சுற்றுச்சுவர்களின் வண்ண ஓவியங்கள் வரைந்து அழகுப்படுத்தும் பணிகளில் சிறப்பாக செயல்படுத்திய மண்டலங்களுக்கான பாராட்டு சான்றிதழ்களை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் இன்று மண்டல அலுவலர், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோருக்கு வழங்கினார்.

மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள்  பேசும்பொழுது தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை மாநகரை சர்வதேச நகரங்களுக்கு இணையாக அழகுப்படுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்த சிங்காரச் சென்னை 2.ஷீ திட்டத்தை அறிவித்து விரைந்து செயல்படுத்த நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளார்கள். மேலும், சென்னை மாநகரின் பசுமைப் பரப்பளவை அதிகரிக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பாரம்பரிய மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்கவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

அதனடிப்படையில், சென்னை மாநகரில் புயல் மற்றும் இயற்கை சீற்றங்களை தாங்கக்கூடிய வகையிலும், நீண்ட நாட்களுக்கு பயனுள்ளதாகவும், அனைத்து மண்டலங்களிலும் மண்ணின் தன்மை, கிடைக்கும் தண்ணீரின் தரம், அளவு, சாலைகள் மற்றும் தெருக்களின் அகலத்திற்கு ஏற்றார்போல் பாரம்பரிய மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகள், தெருக்கள் மற்றும் பூங்காக்களில் மரக்கன்றுகளை நட்டு தொடர்ந்து பராமரிப்பது தொடர்பாக தன்னார்வ அமைப்பினர், குடியிருப்பு நலச் சங்கங்கள் மற்றும் பிற அமைப்பினர் ஆகியோரை இணைத்து பசுமை பேரியக்கமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பல்வேறு குடியிருப்பு நலச் சங்கப் பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் மாநகராட்சியுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.  பெரும்பாலும் மரக்கன்றுகள் குறைந்தபட்சம் 7 அடி உயரத்துடன் பாதுகாப்பு மரக் கூண்டுகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியில் 07.05.2021 முதல் 23.10.2021 வரை மாநகராட்சி சார்பில் குடியிருப்பு நலச் சங்கங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து 87,004 மரக்கன்றுகள் நடப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். முன்னதாக, ரிப்பன் கட்டட வளாகத்தில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் மரக்கன்றுகளை நட்டார்.

Tags : Chennai ,Minister ,KN Nehru , We will start planting trees not only in Chennai but in all corporations: Minister KN Nehru
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் மனு