×

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு திடீரென ஒத்திவைப்பு!: அருகில் உள்ள மையங்களில் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்படும் அமைச்சர் பொன்முடி உறுதி..!!

சென்னை: அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் தேர்வு இரு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1,060 விரிவுரையாளர்களை தேர்வு செய்வதற்கான போட்டி தேர்வு வரும் 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் 129 மையங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்வர்களின் ஊரில் இருந்து பல நூறு கிலோ மீட்டருக்கு அப்பால் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து தேர்வர்களுக்கும் அவர்களின் சொந்த மாவட்டத்தில் தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தினர். இதனை ஏற்றுக்கொண்ட அரசு பாலிடெக்னீக் விரிவுரையாளர் தேர்வை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.

ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணை ரத்து செய்யப்படும் என்று கூறியுள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தேர்வர்கள் அவரவர் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள தேர்வு மையங்களிலேயே தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார். அரசு பணியிட நியமனம், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை போன்றவற்றில் சமூக நீதி கொள்கை சரியாக பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழு அதனை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். பி.எச்.டி. இல்லாவிட்டாலும் அண்ணா பல்கலைக்கழக விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அவர்களுக்கு தகுதி மதிப்பெண் வழங்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார்.


Tags : Minister ,Bonamai , Polytechnic Lecturer Selection, Minister Ponmudi
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...