பொள்ளாச்சியில் மழையால் நாசமானது சாலையோரம் மூட்டை, மூட்டையாக வெங்காயத்தை கொட்டிய வியாபாரிகள்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி  காந்தி மார்க்கெட் அருகே உள்ள வெங்காய மார்க்கெட்டுக்கு, தமிழகத்தின்  பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா உள்ளிட்ட வெளி  மாநிலங்களிலிருந்தும் வெங்காய வரத்து உள்ளது. அதில் பெரும்பாலும், கேரள  மாநில பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.  கடந்த ஒரு மாதத்திற்கு  முன்பிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சின்ன வெங்காயம்  வரத்து அதிகமானது. இதனால் சுமார்  மூன்று வாரத்துக்கு முன்பு ஒரு கிலோ சின்ன  வெங்காயம் ரூ.20ஆக சரிந்தது.

போதிய விலையில்லையென்று விவசாயிகள்  வேதனையடைந்தனர். அதுபோல், தமிழக பகுதியிலிருந்து மட்டுமின்றி  மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு இடங்களிலிருந்து பெரிய வெங்காயம் வரத்து  அதிகரிக்க துவங்கியது. இதனால், பல்லாரி ஒருகிலோ அதிகபட்சமாக ரூ.25க்கே  விற்பனையானது. ஆனால், இந்த மாதம் துவக்கத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு  மாவட்டங்கிளல் பரவலான மழையால் வெங்காய அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.  

இருப்பினும் இருப்பு வைக்கப்பட்டுள்ள வெங்காயங்கள், மார்க்கெட்டுக்கு  விற்பனைக்காக அனுப்பும் பணி தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே, கன மழை  காரணமாக வெளிமாநிலங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்து கொண்ட வரப்பட்ட  பல்லாரி மற்றும் சின்ன வெங்காயம் உள்ளிட்டவை அழுகிய நிலை ஏற்பட்டது.  இதனால், தொழிலாளர்கள் மூலம் அதனை தரம் பிரித்து விற்பனைக்காக அனுப்பும் பணி  நடைபெற்றது. இருப்பினும், மழையால் நாசமான வெங்காயத்தை குப்பையில் கொட்டும்  நிலை ஏற்பட்டுள்ளது. வெங்காய மார்க்கெட்டின் வெளிப்பகுதி ரோட்டோரம்  நேற்று, மூட்டை, மூட்டையாக அழுகிய வெங்காயம் கொட்டப்பட்டது,  வியாபாரிகளிடையே வேதனையை ஏற்படுத்தியது.

Related Stories:

More
>