×

இறக்குமதி கார் விவகாரத்தில் தனி நீதிபதியின் கருத்துக்கள் என்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தின!: நடிகர் விஜய்

சென்னை : இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் என்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் கடந்த 2012ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகியபோது அந்த வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து காரை இறக்குமதி செய்தபோது இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரியை தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், கடந்த முறை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்த போது, அவர் அதனை தள்ளுபடி செய்து நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும் என்றும் பல கருத்துக்களை தெரிவித்திருந்தார். மேலும் நடிகர் விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு, 1 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், மீண்டும் இன்று நீதிபதிகள் புஷ்பா, சத்தியநாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் நடிகர் விஜய் சார்பில் ஆஜராகி, விஜய்க்கு எதிராக தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்களை நீக்க வேண்டும் என்று வாதிட்டார். மேலும் தனி நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கள் தனிப்பட்ட முறையில் புண்படுத்தும் வகையில் இருந்தது. இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் நீதிபதி தெரிவித்த கருத்து குற்றவாளி போல காட்டியுள்ளது. வழக்கு ஆவணங்களில் தொழிலை சொல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் வாதிடப்பட்டது.

தொடர்ந்து நுழைவு வரி செலுத்தவில்லை, வரி செலுத்துவதை தவிர்க்க வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறுவதும் தேவையற்ற கருத்து. நிலுவை வரித்தொகையான ரூ.32.30 லட்சத்தை ஆகஸ்ட் 7ம் தேதி செலுத்திவிட்டோம். கஷ்டப்பட்ட உழைப்பில் கார் வாங்கப்பட்ட நிலையில் அதை நீதிபதி விமர்சிப்பது தேவையற்றது. தன்னை தேச விரோதியாக கூறுவது தவறு என்றும்  விஜய் தரப்பில் குறிப்பிடப்பட்டது. இந்த வாதத்தை கேட்ட இரண்டு நீதிபதிகள் அமர்வு, கருத்துக்களை நீக்கக்கோரும் விஜய் வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

Tags : Vijay , Imported car, solo judge, actor Vijay
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...