இது முதல் போட்டி தான்... கடைசி அல்ல: கேப்டன் விராட் கோஹ்லி பேட்டி

துபாய்: 7வது ஐசிசி டி.20 உலக கோப்பை தொடரில் நேற்றிரவு துபாயில் நடந்த போட்டியில் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோஹ்லி 57 (49பந்து), ரிஷப் பன்ட் 39 (30 பந்து) ரன் அடித்தனர். ரோகித்சர்மா 0, கே.எல்.ராகுல் 3, சூர்யகுமார் யாதவ் 11, ஜடேஜா 13, ஹர்த்திக் பாண்டியா 11 ரன்னில் ஆட்டம் இழந்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷாகின் ஷா அப்ரிடி 3, ஹசன்அலி 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் 17.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 152 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முகமது ரிஸ்வான் 79 (55 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் பாபர் அசாம் 68 (52 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். அப்ரிடி ஆட்டநாயகன் விருது பெற்றார். உலக கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியது. இதனை அந்நாட்டு ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தோல்விக்கு பின் இந்திய கேப்டன் விராட்கோஹ்லி கூறியதாவது: திட்டங்களை நாங்கள் சரியாக வெளிப்படுத்தவில்லை.

பாகிஸ்தான் சிறப்பாக செயல்பட்டனர். 20 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்த பின்னர் மீண்டு வருவது கடினம். நாங்கள் 15-20 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பாகிஸ்தான் பவுலர்கள் தொடர்ந்து கட்டுக்கோப்பாக பந்துவீசி ரன் அடிக்க விடவில்லை. பனியின் தாக்கமும் இருந்தது. ஆரம்பத்திலேயே விக்கெட் எடுத்து பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். வேகம் குறைந்த பந்துகளை வீசும் பவுலர் அணிக்கு தேவை. அதுகுறித்து விவாதிப்போம். ஆனால், அணி தற்போது பலமானதாக தான் இருக்கிறது. இது முதல் போட்டிதான். கடைசி போட்டி கிடையாது, என்றார்.

Related Stories: