10 ஆண்டு அதிமுக ஆட்சியில் கண்டு கொள்ளவில்லை ஆபத்தான நிலையில் முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம்-இடித்து அப்புறப்படுத்த மக்கள் கோரிக்கை

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து அரசு மருத்துவமனையாக இருந்தது. அதன் பிறகு 1988ம் ஆண்டு ஆரம்ப சுகாதார நிலையமாக மாறியது. இருந்தாலும் அரசு மருத்துவமனைக்கு உள்ள அனைத்து வசதிகளும் தொடர்ந்து இருந்து வந்தது. பின்னர் அது படிப்படியாக குறைந்து 2001ம் ஆண்டில் பிரேத பரிசோதனை வசதியும் ரத்து செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இப்பகுதி மக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்று அன்று முதல் இன்று வரை கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் பழுதடைந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டித்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டன. அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் கட்டுமான பணி துவங்க அனைத்து கட்டிடங்களும் இடிக்கப்பட்டன.

ஆனால் அந்த வளாகத்தில் நோயாளிகள் தங்கும் பழமையான வார்டு கட்டிடம் மட்டும் இடிக்காமல் சிமென்ட் குடோனாக பயன்படுத்தி வந்தனர். கட்டிடப்பணி முழுமையாக முடிந்து புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை திறந்து தற்பொழுது இயங்கி வரும் நிலையில் தற்போது வரை இந்த பழுதடைந்த கட்டிடம் இடிக்காமல் உள்ளது. இந்த கட்டிடம் ஆபத்தான நிலையில் உள்ளது என்று கூட அறியாமல் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பழமையான கட்டிடத்தின் படியில் உட்கார்ந்து ஓய்வு எடுத்து வருகின்றனர்.

அதேபோல் இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவருடன் வரும் மக்கள், அதேபோல் அருகில் பேருந்து நிறுத்தம் உள்ளதால் அங்கு வரும் வெளியூர் பயணிகள் இந்த இடிபாடுகளுடன் உள்ள கட்டிடத்தின் அருகில் தான் நிழலுக்கு நின்று ஓய்வு எடுத்து வருகின்றனர். இந்த கட்டிடத்தை இனியும் காலதாமதம் ஏற்படுத்தாமல் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More